பல்கலைக்கழக துணைவேந்தர்களை அரசே நியமிக்கும் வகையில் இயற்றப்பட்ட 10 சட்டங்களும் உச்ச நீதிமன்ற தீர்ப்பு மூலம் அமலுக்கு வந்துள்ளது. இதற்கான அறிவிக்கை தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்ட விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த வழக்கில், கடந்த 8-ம் தேதி தீர்ப்பு வெளியானது. இதில், தமிழக ஆளுநருக்கு எதிராக பல்வேறு கருத்துகள் தெரிவிக்கப்பட்டதுடன், சட்டப்பேரவையால் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கவும் கால நிர்ணயம் செய்யப்பட்டது. இதுதவிர, பேரவையில் இயற்றி, ஏற்கெனவே ஆளுநருக்கு அனுப்பப்பட்டு நிலுவையில் உள்ள 10 மசோதாக்களுக்கு உச்ச நீதிமன்றமே தனி அதிகாரம் மூலம் ஒப்புதல் அளித்து உத்தரவிட்டது.
இதன்மூலம், தமிழ்நாடு பல்கலைக்கழகங்கள் மசோதா, 2-ம் திருத்த மசோதா மற்றும் மீன்வள பல்கலைக்கழகம், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், அம்பேத்கர் பல்கலைக்கழகம், தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம், வேளாண் பல்கலைக்கழகம், தமிழ் பல்கலைக்கழகம் தொடர்பான மொத்தம் 10 மசோதாக்களுக்கும் ஒப்புதல் கிடைத்து, அமலுக்கு வந்துள்ளன. இதில், மீன்வள பல்கலைக்கழகத்துக்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயரை சூட்டுவதற்கான சட்டத் திருத்தமும் அடங்கும்.
துணைவேந்தரை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்குவது, வேந்தருக்கான அதிகாரத்தை ஆளுநருக்கு பதிலாக தமிழக அரசுக்கு வழங்குவது, சிண்டிகேட் உறுப்பினர்களை அரசே நியமிப்பது உள்ளிட்ட அம்சங்களை உள்ளடக்கியதாக இந்த சட்டத் திருத்தங்கள் உள்ளன.
இதுகுறித்து அரசிதழில் வெளியிடப்பட்ட அறிவிக்கையில், ‘உச்ச நீதிமன்றம் கடந்த 8-ம் தேதி வெளியிட்ட தீர்ப்பின்படி, சட்ட மசோதா மறுபரிசீலனை செய்யப்பட்டு ஒப்புதலுக்காக ஆளுநருக்கு மீண்டும் அனுப்பப்பட்ட நாளான கடந்த 2023 நவம்பர் 18-ம் தேதி ஒப்புதல் அளிக்கப்பட்டதாக கருதப்பட வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.
சட்டத்தில் துணைவேந்தர் என்பதற்கு பதில், அரசு என்ற வார்த்தை மாற்றி அமைக்கப்பட வேண்டு்ம். துணைவேந்தரை நீக்கம் செய்ய, உயர் நீதிமன்ற நீதிபதி அல்லது தலைமைச் செயலர் நிலைக்கு குறையாத அரசு அதிகாரி தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு, பரிந்துரை பெற்று அதன்படி நீக்கப்பட வேண்டும். சம்பந்தப்பட்ட துணைவேந்தருக்கும் அவரது தரப்பு விளக்கத்தை அளிக்க வாய்ப்பு அளிக்க வேண்டும். விசாரணை அறிக்கை, துணைவேந்தர் அறிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் இறுதியாக நீக்கம் செய்வதற்கான முடிவை எடுக்க வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, துணைவேந்தரை நீக்கம் செய்ய ஆளுநரின் அனுமதி பெற வேண்டியிருந்தது குறி்ப்பிடத்தக்கது.