சிஎஸ்கே தோல்விக்கு இதுதான் காரணம், அடுத்த மேட்சில் நடக்காது – கேப்டன் தோனி உறுதி

MS Dhoni : ஐபிஎல் 2025 தொடரின் 25வது போட்டியில் சிஎஸ்கே – கேகேஆர் அணிகள் மோதின. இப்போட்டியில் கேகேஆர் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சிஎஸ்கே அணி இதுவரை ஐபிஎல் வரலாற்றில் சந்திக்காத தோல்வியை சந்தித்து. அதாவது, அதாவது சிஎஸ்கே அணிக்கு எதிரான எந்த அணியும் 10 ஓவர்களில் சேஸிங் செய்து வெற்றி பெற்றதில்லை. அதேபோல், இந்த சீசனில் சிஎஸ்கே சந்திக்கும் 5வது தோல்வியாகும். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் வரலாற்றில் இதுவரை தொடர்ச்சியாக 5 போட்டிகளில் தோற்றதே இல்லை. இதனால் சிஎஸ்கே அணி நிர்வாகமும், ரசிகர்களும் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர். இந்த சூழலில் சிஎஸ்கே தொடர் தோல்வி குறித்து கேப்டன் எம்எஸ் தோனி வெளிப்படையாக பேசியுள்ளார். 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சரியான பார்ட்னர்ஷிப் அமையவில்லை, பேட்ஸ்மேன்கள் தேவையில்லாத ஷாட்டுகளை ஆடுகின்றனர், அவர்களின் பலம் என்னவோ அதற்கு ஏற்றார்போல் ஆடினாலே போதும் என எம்எஸ் தோனி தெரிவித்துள்ளார். மேலும், சேப்பாக்கம் பிட்ச் எங்களுக்கு ஏற்றார்போல் இல்லை என கூறிய அவர், பேட்டிங்கில் சிறப்பாக ஆடியிருக்க வேண்டும் என குறிப்பிட்டு கூறினார் தோனி. 

தோனி பேசும்போது, ” இந்த நாள் எங்களுக்கானதாக இருக்கவில்லை. அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும். என்னைப் பொறுத்தவரை நாங்கள் போதுமான ரன்கள் அடிக்கவில்லை. ஆரம்பத்தில் அதிக விக்கெட்டுகளை இழக்கும்போது இயல்பாகவே அணி மீது அழுத்தம் அதிகரிக்கிறது. சிஎஸ்கே அணியில் சரியான பார்ட்னர்ஷிப் அமையவில்லை. இதுவே எங்களுக்கு மிகப்பெரிய குறைதான். கண்டிஷன்களை நன்றாக புரிந்துகொள்ள வேண்டும். எது நமக்கு பலமாக இருக்கிறதோ அதற்கு முக்கியத்துவம் கொடுத்து அதில் கவனம் செலுத்தினாலே போதும். மற்றவர்கள் எப்படி விளையாடுகிறார்கள் என பார்த்து விளையாட தேவையில்லை. 

நல்ல கிரிக்கெட் ஷாட்டுகளை தேர்வு செய்து விளையாடினால் போதும். மற்றவர்கள் 60 ரன்கள் பவர்பிளேவில் அடிக்கிறார்கள் என்பதற்காக நாமும் அவ்வளவு ஸ்கோர் அடிக்க வேண்டிய அவசியமில்லை. ஸ்கோர் போர்டை பார்க்காமல் அணிக்கு என்ன தேவை என்பதை உணர்ந்து விக்கெட்டை விடாமல் விளையாட வேண்டும். இதனால் நல்ல பார்ட்னர்ஷிப் கிடைக்கும். மிடில் அல்லது கடைசி கட்ட ஓவர்களில் அடித்து ஆடிக்கொள்ளலாம். அப்போது இயல்பாக ரன்கள் வந்துவிடும். அதனைவிடுத்து ஆரம்பத்தில் விக்கெட்டுகளை விட்டால் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மீது தேவையில்லாத அழுத்தம் ஏற்படுகிறது. இதனை சரிசெய்து அடுத்த போட்டிகளில் விளையாட முயற்சிப்போம்” என தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.