சிஎஸ்கே பிளேஆப் கனவு அவ்வளவு தானா? எஞ்சி இருக்கும் சில வாய்ப்புகள்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஐபிஎல் 2025 அவ்வளவு சிறப்பானதாக அமையவில்லை. இதுவரை விளையாடிய ஆறு போட்டிகளில் ஐந்தில் தோல்வியடைந்து ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. மேலும் 18 வருட ஐபிஎல் வரலாற்றில் முதல்முறையாக தொடர்ந்து 5 போட்டிகளில் தொடர் தோல்வியை சந்தித்துள்ளது சென்னை அணி. தற்போது புள்ளி பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் உள்ளது சிஎஸ்கே. மோசமான ரன் ரேட் இருந்தாலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பிளே ஆப் செல்வதற்கான வாய்ப்பு இன்னும் உள்ளது. இந்த சீசனில் இதுவரை 6 போட்டிகளில் விளையாடி உள்ளனர், மீதும் 8 போட்டிகள் உள்ள நிலையில் இங்கிருந்து சென்னை அணி பிளே ஆப் செல்ல என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

சென்னை சூப்பர் கிங்ஸ்

சென்னை சூப்பர் கிங்ஸ் அனியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்குவாட்க்கு கையில் ஏற்பட்ட காயம் காரணமாக தற்போது மீண்டும் தோனி கேப்டன்ஷிப் பொறுப்பை ஏற்றுள்ளார். இருப்பினும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மோசமான தோல்வி சந்தித்தனர். டாப் ஆர்டரில் உள்ள பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து சொதப்பி வருவதால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. இன்னும் மீதமுள்ள எட்டு போட்டிகளில் குறைந்தது 7ல் வெற்றி பெற்றால் 16 புள்ளிகளுடன் ப்ளே ஆஃப் வாய்ப்பை பெறுவதற்கு ஒரு வாய்ப்பு உள்ளது. கடந்த ஆண்டு ஆர்சிபி அணி முதல் 8 போட்டிகளில் 7ல் தோல்வி அடைந்தது. இருப்பினும் அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி பெற்று பிளேஆப்க்கு தகுதி பெற்றது.

தோனியின் கேப்டன்ஷிப் திறமையின் மூலம் கீழே உள்ள அணியை மேலே கொண்டு வர முடியும் என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர். இது போன்ற கடினமான சூழ்நிலைகளில் அணியை இதற்கு முன்பு மேலே கொண்டு சென்றுள்ளார். அணியில் உள்ள அனைவரும் சிறப்பாக விளையாடவில்லை என்றாலும் பேட்டிங்கில் செய்யும் சில மாற்றங்கள் சென்னை அணிக்கு இன்னும் மீண்டும் பலத்தை கொண்டு வர முடியும். அதே போல மிடில் ஆர்டர்களில் ரண்களை கொண்டு வரும் வீரர்கள் இல்லாமல் சென்னை அணி தினறி வருகிறது. அடுத்ததாக வரும் திங்கட்கிழமை லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு எதிராக விளையாட உள்ளனர். இந்த போட்டியில் சென்னை அணியின் பிளே ஆப் வாய்ப்பு இருக்குமா இருக்காதா என்பது தெரிந்துவிடும்.

சென்னை சேப்பாக்கம் மைதானம் சிஎஸ்கேவிற்கு ஒரு கோட்டையாக இருந்த நிலையில் தற்போது இந்த கோட்டை கொஞ்சம் கொஞ்சமாக சரிந்து வருகிறது. முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக வெற்றி பெற்றிருந்தாலும் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து வருகின்றனர். சென்னையில் வெற்றி பெற போராடி வந்த, ஆர்சிபி, டெல்லி, கொல்கத்தா போன்ற அணிகள் எளிதாக வெற்றி பெற்று செல்கின்றன. சென்னை அணி தொடர் தோல்விகளை சந்தித்து வந்தாலும் சிஎஸ்கே ரசிகர்கள் தொடர்ந்து தங்கள் அணிக்கு ஆதரவை அளித்து வருகின்றனர். இந்த நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் சென்னை அணி மேலே வருமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.