சென்னையில் 400 கிலோவோல்ட் வழித் தடத்தில் மின்சாரம் எடுத்துச் செல்ல மத்திய அரசு அனுமதி

சென்னை: சென்னையில் 400 கிலோவோல்ட் கேபிள் வழித் தடத்தில் மின்சாரம் எடுத்து வருவதற்கு, மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.

தமிழகத்தில் 230 கிலோவோல்ட் திறன் வரையிலான மின்சாரம் கேபிள் மூலமும், 400 கிலோவோல்ட் மற்றும் அதற்கு மேல் திறன் உடைய மின்சாரம் மின்கோபுர வழித்தடங்களில் எடுத்துச் செல்லப்படுகிறது. கேபிள் வழித் தடத்தில் மின்சாரம் எடுத்து செல்வதற்கு செலவு அதிகம் ஆகும். சென்னையில் இடநெருக்கடியால் கோபுர வழித்தடம் அமைப்பது சிரமம். எனவே, சென்னையில் அதிக மின்சாரம் எடுத்துவர 400 கிலோவோல்ட் திறனில் 3 கேபிள் வழித்தடங்கள் அமைக்கும் பணி கடந்த 2020 மே மாதம் தொடங்கியது.

அதன்படி, செங்கல்பட்டு மாவட்டம், ஒட்டியம்பாக்கம் 400 கிலோவோல்ட் துணைமின் நிலையத்தில் இருந்து கிண்டி இடையில் 18 கி.மீ. தூரத்துக்கு வழித்தடம் அமைக்கப்படுகிறது. அதில், ஒட்டியம்பாக்கம்-வேளச்சேரி ரயில் நிலையம் வரை 6 கி.மீ. தூரத்துக்கு மின்கோபுர வழித்தடமும், அங்கிருந்து கேபிள் வழித் தடமும் அமைக்கப்படுகிறது.

திருவள்ளூர் மாவட்டத்தில் அலமாதி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுங்குவார்சத்திரம் இடையே 400 கிலோவோல்ட் திறனில் மின்கோபுர வழித் தடம் செல்கிறது. அந்த வழித் தடத்தில் வெல்லவேடு அருகில் பாரிவாக்கத்தில் இருந்து கிண்டிக்கு 16 கி.மீ. தூரத்துக்கு கேபிள் வழித் தடம் அமைக்கப்படுகிறது.

மணலி-கொரட்டூர் வழித் தடத்தில் மஞ்சம்பாக்கத்தில் இருந்து கொரட்டூர் துணைமின் நிலையம் வரை 12 கி.மீ. தூரத்துக்கு கேபிள் வழித்தடம் அமைக்கப்படுகிறது. இவற்றின் மொத்த திட்ட செலவு ரூ.1,100 கோடி. இப்பணிகளை கடந்த 2023-ம் ஆண்டுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டது. ஆனால், மெட்ரோ ரயில் கட்டுமானம் உள்ளிட்ட காரணங்களால் திட்டமிட்டபடி இப்பணி முடியவில்லை. தற்போது, ஒட்டியம்பாக்கம்-கிண்டி வழித் தடத்தில் ஒட்டியம்பாக்கம்-வேளச்சேரி இடையில் 2 கி.மீ. பணி முடிவடைய வேண்டும்.

மஞ்சம்பாக்கம்-கொரட்டூர் வழித்தடப் பணிகள் முடிவடைந்து விட்டன. கிண்டி வழித்தடத்தில் 2.50 கி.மீ. தூரம் மட்டுமே முடிவடைய வேண்டும். அதிக திறன் என்பதால் 400 கிலோவோல்ட் வழித் தடத்தில் மின்சாரம் எடுத்துச் செல்ல மத்திய அரசிடம் அனுமதி பெற வேண்டும்.

அதன்படி, கேபிள் வழித்தடத்தில் மின்சாரம் எடுத்து செல்வதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து, முதல் கட்டமாக பணிகள் முடிவடைந்துள்ள மஞ்சம்பாக்கம்-கொரட்டூர் வழித்தடத்தில் மின்சாரம் எடுத்து செல்வதற்கு சோதனைப் பணிகள் முடிவடைந்துள்ளது. எனவே, விரைவில் மின்சாரம் எடுத்துச் செல்லப்படும் என, மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.