புதுடெல்லி: டிஜிட்டல் குற்றங்களில் ஈடுபடுத்தப்பட்ட 60 இந்தியர்கள் மியான்மரில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக 5 முகவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: டிஜிட்டல் குற்றங்களில் ஈடுபடுத்தப்பட்ட 60 இந்தியர்களை சைபர் கிரைம் அதிகாரிகள் மியான்மரில் இருந்து மீட்டுள்ளனர். இது தொடர்பாக வெளிநாட்டை சேர்ந்த ஒருவர் உட்பட 5 முகவர்களை மகாராஷ்டிர சைபர் குற்றப் பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர்.
விசாரணையில், பாதிக்கப்பட்ட இளைஞர்கள் தாய்லாந்தில் இருந்து மியான்மருக்கு அழைத்துச் செல்லப்பட்டு டிஜிட்டல் கைது மற்றும் பிற முதலீட்டு மோசடியில் ஈடுபடுமாறு கட்டாயப்படுத்தப்பட்டதாக தெரியவந்தது.
சட்டவிரோத ஆட்கடத்தலில் ஈடுபடும் ஒரு கும்பல் இந்திய இளைஞர்களை குறிவைத்து, தாய்லாந்து மற்றும் பிற கிழக்கு ஆசிய நாடுகளில் அதிக சம்பளத்தில் வேலைவாய்ப்பு இருப்பதாக சமூக ஊடகத்தில் ஆசை வார்த்தைகளை கூறியுள்ளது. இதற்கு முன்வரும் இளைஞர்களுக்கு பாஸ்போர்ட், தாய்லாந்துக்கான சுற்றுலா விசா, விமான டிக்கெட் ஆகியவற்றை இங்குள்ள முகவர்கள் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளனர். இந்திய இளைஞர்கள் தாய்லாந்து சென்ற பிறகு அவர்கள் மியான்மருக்கு கடத்திச் செல்லப்பட்டு டிஜிட்டல் குற்றங்களில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
வெப்சீரிஸ் மற்றும் டி.வி.க்களில் தோன்றும் நடிகர் மனீஷ் கிரே என்கிற மேடி, தைசன் என்ற ஆதித்ய ரவிச்சந்திரன், ரூப்நாராயண் ராம்தர் குப்தா, ஜென்சி ராணி, சீனா-கஜகஸ்தான் நாட்டை சேர்ந்த தலனிட்டி நுலாக்சி ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்திய இளைஞர்களை மியான்மருக்கு கடத்த கிரே மற்றும் அவரது கூட்டாளிகளும் உதவியுள்ளனர். தலனிட்டி நுலாக்ஸி இந்தியாவில் ஒரு சைபர் கிரைம் பிரிவை நிறுவ திட்டமிட்டமிருந்தார்.இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.