தீவிரமடையும் வர்த்தகப்போர்: அமெரிக்க பொருட்கள் மீது 125 சதவீத வரி விதித்து சீனா பதிலடி

பீஜிங்,

அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றதுமுதல் பல்வேறு அதிரடி நவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன்படி, அமெரிக்க பொருட்கள் மீது பல்வேறு நாடுகள் அதிக வரி விதிப்பதாகவும், அதற்கு பதிலடியாக அந்தந்த நாடுகளில் இருந்து அமெரிக்கா இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.

அதன்படி, இந்தியா, சீனா, ஐரோப்பிய யூனியன், இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகள் மீது வரிவிதித்தார். இதனை தொடர்ந்து 90 நாட்களுக்கு இந்த வரிவிதிப்பு நிறுத்தி வைக்கப்படுவதாகவும் தனது முடிவில் இருந்து பின்வாங்கினார். அதேவேளை, சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான வரி நீடிக்கும் என்றார். சீனா மீது கூடுதலாக வரி விதிப்பை அறிவித்தார்.

அதன்படி, சீனாவில் இருந்து அமெரிக்கா இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு அதிரடி வரி உயர்வை டிரம்ப் அறிவித்தார். இதற்கு சீனாவும் தக்க ரீதியில் பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் இருநாடுகளுக்கும் இடையே வர்த்தகப்போர் ஏற்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 145 சதவீத வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார்.

இந்நிலையில், டிரம்ப்பின் நடவடிக்கைக்கு சீனா பதிலடி கொடுத்துள்ளது. அதன்படி, அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட கூடுதல் வரியை 84 சதவீதத்தில் இருந்து 125 சதவீதமாக சீனா உயர்த்தியுள்ளது.

தற்போதைய நிலவரப்படி, சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா 145 சதவீத வரி விதித்துள்ளது. இதற்கு பதிலடியாக அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு சீனா 125 சதவீத வரி விதித்துள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.