புதிய கட்சி தொடங்குகிறாரா ஓ.பன்னீர்செல்வம்..? வெளியான தகவல்

புதுடெல்லி,

அ.தி.மு.க.வில் ஏற்பட்ட உட்கட்சி பூசல் காரணமாக கட்சியின் சின்னத்துக்கு பங்கம் விளைந்த போது, தற்போதைய பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் கரம் கோர்த்தார் ஓ.பன்னீர் செல்வம். இதனைத்தொடர்ந்து அ.தி.மு.க.வில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற புதிய பதவிகள் உருவாக்கப்பட்டன.

இதன் பிறகு கட்சியில் ஒற்றைத் தலைமை வேண்டும் என்ற கோரிக்கை வலுத்த நிலையில் எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளர் ஆனார். ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் ஓரங்கட்டப்பட்டனர். இதற்கிடையே கடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவோடு கூட்டணி அமைத்து போட்டியிட்ட அ.தி.முக அதன்பிறகு நாடாளுமன்ற தேர்தலில் அந்த கூட்டணியை முறித்துக் கொண்டது.

இந்நிலையில் தற்போது மீண்டும் பா.ஜ.க. – அ.தி.மு.க கூட்டணி உருவாகி உள்ளது. ஆனால் இந்த கூட்டணியில் ஓ.பன்னீர்செல்வம் இடம் பெறக் கூடாது என்பதை எடப்பாடி பழனிசாமி தரப்பினர் வலியுறுத்தி வருவதாக தெரிகிறது. இதனால் ஓ.பன்னீர்செல்வம் வேறு விதமாக ஒரு கணக்கை போட்டு வைத்திருப்பதாகவும், அந்த பாதையில் ரகசியமாக காய் நகர்த்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

இதன்படி அ.தி.மு.க.வில் தன்னை சேர்க்காவிட்டால் புதிய கட்சியை தொடங்க ஓ.பன்னீர் செல்வம் திட்டமிட்டுள்ளதாகவும், இதற்காக, ‘எம்.ஜி.ஆர். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்’ என தேர்தல் ஆணையத்தில் பெயர் பதிவு செய்துவிட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

பண்ருட்டி ராமச்சந்திரனின் இந்த ஆலோசனையை ஏற்றுக்கொண்ட ஓ.பன்னீர் செல்வம், அதன்படியே காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஜோதி ராமன் என்ற தனது ஆதரவாளர் மூலமாக தேர்தல் ஆணையத்தில் ‘எம்.ஜி.ஆர். அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்’ என்கிற கட்சியின் பெயரை பதிவு செய்யக்கோரி விண்ணப்பம் அளித்துள்ளார்.

கடந்த டிசம்பரில் அளித்த இந்த விண்ணப்பத்துக்கு 2025 ஜனவரி மாதம் தேர்தல் ஆணையமும் ஒப்புதல் அளித்ததாக கூறப்படுகிறது. இதன்படி வருகிற தேர்தலில் அமையும் கூட்டணியை பொறுத்து அவரது அடுத்த கட்ட நகர்வுகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.