புதுடெல்லி: மாநில மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் முடிவு எடுக்கப்பட வேண்டும் என குடியரசு தலைவருக்கு காலக்கெடு நிர்ணயித்துள்ள உச்ச நீதிமன்றம், முடிவெடுப்பதற்கு முன் உச்ச நீதிமன்றத்தை அணுகுவது விவேகமானது என்று தெரிவித்துள்ளது.
தமிழக அரசு அனுப்பிய மசோதாக்கள் மீது முடிவெடுக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்துவதாக அவருக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் கடந்த 8-ம் தேதி தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், இது தொடர்பாக ஆளுநருக்கு காலக்கெடு நிர்ணயித்து உத்தரவிட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு, “சட்டப்பேரவை நிறைவேற்றிய ஒரு மசோதாவை நிறுத்திவைத்து குடியரசுத் தலைவருக்கு அனுப்ப ஆளுநர் முடிவு செய்தால் அது தொடர்பாக அமைச்சரவை ஆலோசனைப்படி ஒரு மாத காலத்துக்குள் ஆளுநர் முடிவு எடுக்க வேண்டும்.
அமைச்சரவையின் ஆலோசனைக்கு புறம்பாக அந்த மசோதாக்களை நிறுத்திவைப்பதாக இருந்தால், ஆளுநர் அதிகபட்சமாக 3 மாதங்களுக்குள் அவற்றை திருப்பி அனுப்ப வேண்டும். அதேவேளை அந்த மசோதாக்கள் மாநில சட்டப்பேரவையில் மறுநிறைவேற்றம் செய்யப்பட்டு மீண்டும் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டால் அந்த மசோதாக்கள் மீது ஒரு மாதத்துக்குள் ஒப்புதல் அளிக்க வேண்டும். மசோதாக்கள் குடியரசு தலைவருக்கு ஆளுநரால் பரிந்துரைக்கப்படுமானால் அவற்றின் மீது குடியரசு தலைவர் 3 மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும்” என தீர்ப்பளித்தது.
மசோதாக்கள் மீது சட்ட ஆலோசனையை உச்ச நீதிமன்றத்திடம் கேட்க குடியரசுத் தலைவருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. மாநில ஆளுநர்களுக்கு கிடையாது. இதை சுட்டிக்காட்டியுள்ள உச்ச நீதிமன்ற நீதிபதிகள், “ஆளுநர்கள் மசோதாக்களை குடியரசு தலைவருக்கு பரிந்துரை செய்தால், அவர் உச்ச நீதிமன்றத்திடம் ஆலோசனை பெறுவது விவேகமானது. அரசியலமைப்பின் பிரிவு 143 இன் கீழ் ஒரு மசோதா குறித்த சட்ட ஆலோசனையை குடியரசு தலைவர், உச்ச நீதிமன்றத்திற்கு பரிந்துரைப்பது கட்டாயம் அல்ல. என்றபோதிலும், விவேகமான ஒரு நடவடிக்கையாக, குடியரசுத் தலைவர் உச்ச நீதிமன்றத்தின் கருத்தைப் பெற வேண்டும் என்று நாங்கள் கருதுகிறோம். ஆளுநர் மசோதாக்களை அரசியலமைப்பு நீதிமன்றங்களுக்கு பரிந்துரைப்பதற்கான வழிமுறை மாநில அளவில் இல்லாததால் இது மிகவும் அவசியமானது.” என்று தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.
மேலும், “ஒரு மசோதா சட்டமாக மாறுவதற்கு முன்பு அதன் அரசியலமைப்பு செல்லுபடியாகும் தன்மை குறித்து கருத்து தெரிவிக்கும் அதிகாரம் அரசியலமைப்பு நீதிமன்றங்களுக்கு உண்டு. ஒரு தவறான மசோதா சட்டமாக மாறினால் இயற்கையாகவே பல்வேறு சிக்கல்கள் ஏற்படும். எனவே, முன்கூட்டியே அத்தகைய ஒரு சட்டம் இயற்றப்படாமல் தடுக்கப்படுமானால் அது நேரத்தையும் பொது வளங்களையும் மிச்சப்படுத்தும். மேலும், பொருத்தமான திருத்தங்களை சட்டமன்றம் மேற்கொள்வதற்கும் வாய்ப்பும் கிடைக்கும்.” என்றும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.