ஐபிஎல் தொடர் கடந்த 22ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இத்தொடரின் 26வது லீக் ஆட்டம் இன்று (ஏப்ரல் 12) லக்னோ எக்னா மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின.
இதில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் குஜராத் டைட்டன்ஸ் அணி பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்கள் சாய் சுதர்சன் மற்றும் சுப்மன் கில் களம் இறங்கினர். அவர்கள் நல்ல தொடக்கத்தை அளித்தனர். அவர்களது விக்கெட்களை வீழ்த்த லக்னோ அணி பந்து வீச்சாளர்கள் மிகவும் சிரமப்பட்டனர்.
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுப்மன் கில் மற்றும் சாய் சுதர்சன் அரைசதத்தை கடந்தனர். பார்ட்னர்ஷிப்பும் 100 ரன்களை கடந்தது. ஒரு கட்டத்தில் சுப்மன் கில் 60 ரன்களில் ஆட்டமிழக்க, அவரை தொடர்ந்து சாய் சுதர்சன் 56 ரன்களிலும் ஜோஸ் பட்லர் 16, வாஷிங்டன் சுந்தர் 2 ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட் 22 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில் 6 விக்கெட்கள் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்தனர். லக்னோ அணி சார்பாக தாக்கூர் மற்றும் ரவி பிஷ்னோய் தலா 2 விக்கெட்களையும் திக்னேஷ் ரதி, ஆவேஷ் கான் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இதனைத் தொடர்ந்து 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி களம் இறங்கினர். மிட்செல் மார்ஷ் இப்போட்டியில் விளையாடாத நிலையில், தொடக்க வீரராக ரிஷப் பண்ட் மற்றும் எய்டன் மார்க்ரம் களம் இறங்கினர். இந்த சீசனில் தொடர்ந்து செளதப்பி வந்த ரிஷப் பண்ட் இந்த போட்டியிலும் செளதப்பினார். அவர் 21 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால் மறுபுறம் சிறப்பாக விளையாடி வந்த மார்க்ரம் பந்துகளை பவுண்டரிகளுக்கு அனுப்பினார்.
ரிஷப் பண்ட் ஆட்டமிழந்த பின்னர் மார்க்ரம் உடன் கைகோர்த்த நிகோலஸ் பூரான் அவரது வழக்கமான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் லக்னோ அணி வெற்றிப்பாதையை நோக்கி வேகமாக நகர்ந்தது. இந்த சூழலில் அரைசதம் கடந்த எய்டன் மார்க்ரம் 58 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து பூரானும் 61 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 19.3 ஓவர்களில் 186 ரன்கள் எடுத்து 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் 3வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.
மேலும் படிங்க: சிஎஸ்கே பேட்டர்கள் டெஸ்ட் போட்டிக்கு பயிற்சி பெறுகிறார்களா? விளாசிய முன்னாள் வீரர்!
மேலும் படிங்க: பச்சை ஜெர்ஸி போட்டா… ஆர்சிபிக்கு லக்கியா… அன்லக்கியா… புள்ளிவிவரங்கள் இதோ!