கோவை: தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், கோவை கணபதி பகுதியில் உள்ள ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்.
தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், கோவை கணபதி பகுதியில் உள்ள ஆயுர்வேத சிகிச்சை மையத்துக்கு அடிக்கடி வந்து சிகிச்சை பெற்று செல்கிறார்.
இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு கோவை வந்த ஓ.பன்னீர்செல்வம், கோவை கணபதியில் உள்ள ஆயுர்வேத சிகிச்சை மையத்துக்கு சென்று தங்கினார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த மையத்தில் நீராவி குளியல், யோகா,நேச்சுரோபதி, அக்குபஞ்சர், பிசியோதெரபி, சிறப்பு தெரபி சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. இந்த சிகிச்சை மையத்தில் 2 நாட்கள் தங்கி சிகிச்சை பெறுவார் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்நிலையில் அதிமுக – பாஜக இடையே மீண்டும் கூட்டணி ஏற்பட்டுள்ளது. சென்னையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, கே.பி.முனுசாமி ஆகியோர் கலந்து கொண்ட நிகழ்வில் கூட்டணி உறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது.
இதனிடையே ஓ.பன்னீர் செல்வம், டிடிவி தினகரன் விவகாரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, அதிமுகவின் உட்கட்சி விவகாரத்தில் பாஜக தலையிடாது என்று தெரிவித்தார்.
வழக்கமாக டெல்லியில் இருந்து தமிழகம் வரும் பாஜக தலைவர்களை முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் சந்தித்து பேசுவார். இந்நிலையில் சென்னையில் அமித்ஷாவை சந்திப்பதை தவிர்த்துவிட்டு கோவை வந்த ஓ.பன்னீர்செல்வம், தனியார் ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்று வருகிறார்.