சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டியில் அபிஷேக் சர்மா 40 பந்துகளில் அதிரடியாக சதமடித்திருந்தார். சதமடித்துவிட்டு கொண்டாட்டத்தில் ஈடுபடுகையில் ஒரு துண்டுச் சீட்டை எடுத்து ரசிகர்களை நோக்கி அபிஷேக் சர்மா காட்டியிருந்தார். அபிஷேக் சர்மா எப்படி சதமடித்தார்? அந்தத் துண்டுச் சீட்டில் என்ன எழுதியிருந்தார்?

‘எப்படி சதமடித்தார்?’
பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்து 245 ரன்களை எடுத்திருந்தது. சன்ரைசர்ஸ் அணிக்கு 246 ரன்கள் டார்கெட். சன்ரைசர்ஸின் சொந்த மைதானமான ஹைதராபாத் மைதானம் முழுக்க முழுக்க பேட்டிங்கிற்கு சாதகமானது. ஆனால், ஹைதராபாத் அணி தொடர்ந்து 4 போட்டிகளில் தோற்றிருந்தது. அதனால் இந்தப் போட்டியிலும் அந்த அணி மீது பெரிய நம்பிக்கையில்லை.
ஆனால், ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே அபிஷேக் சர்மா இந்த எண்ணத்தை மாற்றிவிட்டார். கடந்த சீசனில் ஆடியதை போலவே ஒவ்வொரு பந்தையும் பவுண்டரியாக்கும் எண்ணத்துடனே ஆடினார். பெரிய பெரிய சிக்சர்களை நினைத்தப்படியே அடிக்கவும் செய்தார். பஞ்சாப் அணியினரும் அபிஷேக் சர்மாவின் விக்கெட்டை வாய்ப்புகளை கோட்டைவிட்டுக் கொண்டே இருந்தனர்.

யாஷ் தாகூர் ஒரு நோ – பாலில் அபிஷேக்கை கேட்ச் ஆக்கி பிராங்க் செய்தார். சஹால் ஒரு கேட்ச்சை ட்ராப் செய்தார். சதத்தை கடந்தவுடன் இன்னொரு கேட்ச் என மூன்று முறை தப்பித்தார்.
40 பந்துகளில் அபிஷேக் சர்மா சதமடித்திருந்தார். சதத்தை அடித்துவிட்டு கொண்டாட்டத்தில் ஈடுபடும் போது, பாக்கெட்டுக்குள் இருந்து ஒரு துண்டுச் சீட்டை எடுத்து கேமராக்களுக்கு காட்டினார். அதில், ‘This one is for Orange Army’ (‘ஆரஞ்சு ஆர்மி ரசிகர்களே இது உங்களுக்காகத்தான்!’) ன எழுதப்பட்டிருந்தது.

தொடர் தோல்விகளில் அந்த அணியும் ரசிகர்களும் துவண்டு போயிருந்த நிலையில் அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் அபிஷேக் சர்மா இப்படி செய்திருக்கக்கூடும்.