‘குட் பேட் அக்லி’ படத்திலிருந்து திரும்பிய அனைவரும் டார்க்கீ நாகராஜின் ‘புலி புலி’ பாடலைதான் முனுமுனுத்துக் கொண்டிருக்கிறார்கள். அஜித்தின் ஏ.கே கதாபாத்திரத்தின் எனர்ஜிக்கு இந்தப் பாடல் சரியாகப் பொருந்தியும் இருக்கிறது. இப்போது நாம் வைப்-ஆகிக் கொண்டிருக்கும் இந்தப் பாடல் பத்து வருடத்திற்கு முன்பே வெளியானது.
ஆம், 2012-ம் ஆண்டு இவர் வெளியிட்ட ‘அட்டரனா’ என்ற ஆல்பத்தில் இவருடைய இந்த ‘புலி புலி’ பாடல் இடம்பெற்றிருந்தது.

அன்றும் தமிழ் மக்களிடையே பெரும் வரவேற்பை இப்பாடல் பெற்றது. தற்போது ‘குட் பேட் அக்லி’ படத்திற்காக மீண்டும் இந்தப் பாடலை ரெக்கார்ட் செய்திருக்கிறார் டார்க்கீ நாகராஜ். இந்த ‘புலி புலி’ பாடல் மட்டுமே இவருடைய கரியரை விளக்குவதற்கான அடையாளம் கிடையாது.
அதனை தாண்டி டார்க்கீ நாகராஜின் அடையாளமாக பல விஷயங்கள் இருக்கிறது. அது குறித்து விரிவாக இக்கட்டுரையில் பார்க்கலாம்.
மலேசியா தமிழர்
டார்க்கீ நாகராஜ் ஒரு மலேசியா தமிழர். தனது சிறு வயது முதலே இசையின் மீது ஆர்வம் கொண்ட டார்க்கீ தன்னுடைய 12-வது வயதிலேயே ராப் பாட தொடங்கிவிட்டார். நம் வளரும் பருவத்தில் ஏதோ ஒரு துறையிலிருந்த ஒருவர் நமக்கு ஆதர்ச நாயகனாக இருப்பார்.
அவர்களைப் போலவே நாம் வரவேண்டும் என ஆசைக் கொண்டிருப்போம். அப்படி டார்க்கீ நாகராஜுக்கு மைக்கேல் ஜாக்சன் என்றால் அவ்வளவு ஃபேவரைட். அவரை மிகவும் நேசித்த டார்க்கீ அவரைப் போலவே பின்பு தனது ஹேர் ஸ்டைலையும் மாற்றிக் கொண்டார்.

அதுமட்டுமின்றி, அவரைப் போலவே பல மேடைகளில் நடனமாடவும் செய்தார். மைக்கேல் ஜாக்சனின் நடன ஸ்டைலுடன் தன்னுடைய தனித்த ஸ்டைலையும் சேர்த்து ‘டார்க்கீ ஸ்டைல்’ என்ற புதியதாக ஒரு ஸ்டைலை கையிலெடுத்து பலரையும் ரசிக்கச் செய்திருக்கிறார்.
சரியாக 1996-ல் தனது நண்பர்களோடு இணைந்து ‘சம்பா ராக்’ என்ற புதிய இசைக்குழுவை தொடங்கினார்.
இந்த ‘சம்பா ராக்’ ஆல்பத்தில் இடம்பெற்ற பாடல்தான் நமக்கு மிகவும் பரிச்சயமான ‘அக்கா மக’ பாடல். 2000-ல் இந்தப் பாடலை வெளியிட்டார் டார்க்கீ. இப்போது இருப்பதுபோன்ற மியூசிக் லேபிள் போன்ற பெரியளவிலான வரவேற்பைப் பெற்றுக் கொடுக்ககூடிய விஷயங்கள் அப்போது இல்லை. அப்போது பாடல் பிரபலமாவதே மவுத் ஆஃப் டாக் என்ற ஒரு விஷயத்தின் மூலமாகதான்.
இந்தப் பாடல் அப்போது பலரின் கவனத்தையும் ஈர்த்து மவுத் ஆஃப் டாக் மூலம் பலரும் இந்தப் பாடலின் சிடி-யை வாங்கி கேட்கத் தொடங்கினார்கள்.

1,80,000 சி.டி-கள் விற்பனையாகி அப்போது இந்தப் பாடல் சென்ஷேனல் ஹிட்டும் ஆனது. இந்தப் பாடலைப் பின்னர் இயக்குநர் முத்தையா இயக்கத்தில் சசிக்குமார் நடித்திருந்த ‘குட்டிப் புலி’ படத்திலும் பயன்படுத்தியிருந்தார்கள். இசையில் பரபரப்பாக இயங்கி வந்த டார்க்கீ நாகராஜை சந்தோஷ் நாராயணன் ‘கபாலி’ திரைப்படத்தில் ‘உலகம் ஒருவனுக்கா’ பாடலை பாட வைத்தார்.
சந்தோஷ் நாராயணனுக்கும் டார்க்கீயை மிகவும் பிடிக்குமாம். சந்தோஷ் நாராயணனும் டார்க்கீயை நேரில் சென்று சந்த்திருக்கிறார்.
இப்படியான வரவேற்புக்குப் பிறகும் டார்க்கீயின் கால்கள் ஓய்ந்து அமரவில்லை. விரித்துப் போட்ட தலை முடி, நெற்றியில் பெரிய வடிவிலான குங்குமம் என்ற அடையாளத்துடன் இப்போதும் தொடர்ந்து ஆடிக் கொண்டு மக்களை மகிழ்வித்து வந்தார். இப்போதும் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் நிகழ்வுகளில் பிஸியாக இருக்கிறார் டார்க்கீ.
பலரைப் போலவே இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனும் டார்க்கீயின் மிகப்பெரிய ரசிகராம்.

ஆதிக் ரவிச்சந்திரனின் பள்ளி பருவத்திலிருந்து டார்க்கீயின் பாடல்கள் அவருக்கு அவ்வளவு ஃபேவரைட்டாம். இந்தப் படத்திற்கு ‘புலி புலி’ பாடலை பயன்படுத்த திட்டமிட்டு டார்க்கீயை சென்னைக்கு அழைத்து வந்து ஜி.வி. பிரகாஷின் ஸ்டுடியோவில் மீண்டும் புதுமையான வடிவில் அந்தப் பாடலை ரெக்கார்ட் செய்திருக்கிறார் ஆதிக்.
இந்த வெர்ஷனும் இப்போது ரசிகர்களுக்கு வைப் மெட்டீரியலாகியிருக்கிறது. தற்போது ”இதே எனர்ஜி கொண்ட மற்றுமொரு பாடலை சீக்கிரமாக ஏ.கே-வுக்கு கொடுங்கள்” என்பதே ரசிகர்களின் பெரும்பான்மையான கருத்தாக இருக்கிறது.!