வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்
அந்தமான் நிக்கோபார் தீவுகள் இந்தியாவின் யூனியன் பிரதேசங்களில் ஒன்று. மொத்தமாக, சிறிதும் பெரிதுமாக 870 தீவுகள் இந்த யூனியன் பிரதேசத்தில் இருக்கின்றன. மொத்த ஜனத்தொகை 5 லட்சத்துக்கும் சற்றுக் கீழே.
வங்காள விரிகுடாவில் இந்திய நிலப்பரப்பின் தென்கிழக்கில் அந்தமான் நிக்கோபார் தீவுகள் அமைந்துள்ளன.
அந்தமானில் உள்ள முக்கிய இடங்கள் எல்லாம் இப்போதைய இந்திய அரசால் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
உதாரணத்துக்கு அந்தமான் தலைநகரான போர்ட் ப்ளேர் இப்பொழுது ஷ்ரீ விஜயபுரம் என்று அறியப்படுகிறது. போர்ட் ப்ளேர் பன்னாட்டு விமான நிலையம் வீர் சாவர்க்கர் பன்னாட்டு விமான நிலையம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பெயர் மாற்றப்பட்ட மற்ற இடங்கள் பற்றி நாம் அங்கே செல்லும் பொழுது தெரிந்து கொள்வோம். ஷ்ரீ விஜயபுரமே அந்தமானுள் நுழைய முதல் தொடு புள்ளியாகும்.

போர்ட் பிளேர், கிழக்கிந்திய கம்பெனியின் கடற்படை அதிகாரியும் கடற்படை சர்வேயருமான காப்டன் ஆர்ச்சிபாள்ட் பிளேர் பெயரால் இந்த நகரம் பெயரிடப்பட்டது. 2024ஆம் வருடம் இந்திய அரசாங்கம் இந்த தலைநகரின் பெயரை ஷ்ரீ விஜயபுரம் என்று மாற்றியது.
இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இருந்து அந்தமான் விமான நிலையம் சென்றடைய முடியும். வீர் சாவர்க்கர் விமான நிலையம், பன்னாட்டு விமான நிலையம் என்ற பெயர் பெற்றதை உறுதி செய்ய மலேசிய கோலாலம்பூரில் இருந்து ஒரு விமானம் வாரம் மும்முறை இங்கு இறங்குகிறது.
இவை இல்லாமல் சென்னை, விசாகப்பட்டினம் மற்றும் கொல்கத்தாவில் இருந்து கப்பல் மூலமாகவும் அந்தமானின் ஷ்ரீ விஜயபுரத்தில் உள்ள ஹாடோய் துறைமுகத்தைச் சென்றடையலாம்.
ஆனால் இவை தினசரி கிடையாது. வாரம் ஒருமுறை அல்லது இரு வாரங்களுக்கு ஒரு முறை என்றே இவைப் பயணிக்கின்றன. கடல் பயணம் ஒத்துக் கொள்பவர்கள் முயன்று பார்க்கலாம்.
பயணக் கட்டணம் இந்திய ரூபாய் 2500 முதல் 3000 வரை வரும். தேனிலவு தம்பதியருக்கு உகந்தது. மூன்று நாட்கள் பயணம் செய்ய வேண்டி இருக்கும்.

சென்னையிலிருந்து 1,200 கிமீ தூரத்தில் உள்ள அந்தமான் தலைநகரான ஷ்ரீ விஜயபுரத்தை விமானம் மூலம் 2 மணி நேரப் பிரயாணத்தில் அடைந்துவிடலாம்.
அந்தமானில் பீஎஸ்என்எல், வோடஃபோன், ஏர்டெல் மற்றும் ஜியோ சேவைகள், சில இடங்கள் தவிர்த்துப் பரவலாகக் கிடைக்கின்றன. கடலில் செல்லும்பொழுது டவர் இன்மையால் இணைப்பு கிடைப்பதில்லை.
ஒரு வேளை ஸ்டார்லின்க் கூட்டு முயற்சிக்குப் பின் செயற்கைகொள்கள் மூலம் தொலைத்தொடர்பு கிடைக்கும் பொழுது தங்கு தடையின்றி கிடைக்க வழியுண்டு.
அந்தமான் செல்லும்பொழுது உங்கள் படத்துடன் கூடிய முகவரி கொண்ட அடையாள அட்டை (ஆதார், வோட்டர் அட்டை, ஓட்டுனர் உரிமம், பாஸ்போர்ட்) ஏதாவது ஒன்று எப்பொழுதும் கைவசம் வைத்திருக்க வேண்டும். இவை ஃபெர்ரி சேவைகளுக்கும், செல்லுலர் ஜெயில் உள் அனுமதிக்கும் தேவைப்படும்.
அந்தமான் சுற்றுப்பயண ஏற்பாடுகள் செய்ய இங்குப் பல நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. பணப்பை மெலிதாக இருப்போர் தனிப்பட்ட முறையிலும் உங்கள் பயண ஏற்பாடுகளைச் செய்து கொள்ளலாம்.

வீர் சாவர்க்கர் பன்னாட்டு விமான நிலையத்தை வங்காள விரிகுடா மேல் பறந்து அடைந்தோம்.
விமான நிலையத்தில் இறங்கியவுடன் நீங்கள் இந்தி, பெங்காளி, தமிழ் மற்றும் ஆங்கில மொழி பேசுபவர்களால் வரவேற்கப்படுவீர்கள்.
ஆம் இந்தியும் ஆங்கிலமும் அந்தமான் நிக்கொபார் தீவுகளின் அலுவலக மொழியாக இருந்தாலும் பெங்காளியும் தமிழும் பரவலாகப் பேசப்படுகிறது.
அந்தமானின் உச்சக்கட்ட சுற்றுலாப் பருவம் அக்டோபர் முதல் மார்ச் வரையாகக் கருதப்படுகிறது. இந்த காலகட்டத்தில் ஸ்கூபா டைவிங், ஸ்நோர்க்கெலிங் மற்றும் இதர நீர் விளையாட்டுகளுக்குத் தகுந்த சூழ்நிலையும் சீதோஷ்ணமும் நிலவுகிறது.
பறந்து வந்த பயணக்களைப்பு தீரச் சற்று ஓய்வெடுத்த பின், கடற்கரைகளுக்குப் பெயர் போன அந்தமானின் ஷ்ரீ விஜயபுரத்தில் உள்ள கார்விங் பீச் பார்க்கச் சென்றோம்.
1943 ஆம் வருடம் நேதாஜி அந்தமானுக்குள் நுழைந்து சுதந்திரப் பிரகடனம் செய்து இந்தியக் கொடியை முதன்முதலில் பறக்கவிட்டார்.
இதன் நினைவாக கார்விங் பீச் செல்லும் வழியில் ஒரு நினைவு ஸ்தலமும் இந்தியத் தேசியக் கொடியும் பறக்கிறது.

கார்விங் பீச் பார்த்து நீங்கள் ‘இவ்வளவு தானா!’ என்று மனம் தளர்ந்துவிடக் கூடாது. கார்விங் பீச் பசுமையான மரங்கள் சூழ்ந்திருந்தாலும் சரியாகப் பராமரிக்கப்படாத ஒரு சிறிய கடற்கரையே. இதை வரப்போகும் மெயின் பிக்சருக்கு முந்தைய ட்ரெயிலராக கொள்ளலாம்.
கார்விங் பீச் பார்த்து முடித்து ‘காலா பாணி’ என்று அழைக்கப்படும் செல்லுலர் சிறைச்சாலை பார்க்கச் சென்றோம். காலா பாணி என்றால் தமிழில் கறுப்பு நீர் என்று அர்த்தமாகிறது.
ஜெயிலைச் சூழ்ந்த நீராலும் உள்ளே சென்றால் வெளி வரமுடியாத நிச்சயமற்ற நிலை இருந்ததாலும் 696 தனி செல்கள் கொண்ட இருண்ட செல்லுலர் ஜெயில் ‘காலா பாணி’ என்று இந்தியச் சுதந்திரத்திற்குப் பாடுபட்ட போராளிகளால் அழைக்கப்பட்டது.

செல்லுலர் ஜெயிலைக் காண மாலை 4 மணி வரையே அனுமதிக்கப்படுவோம். 5 மணிக்குச் செல்லுலர் ஜெயிலில் இருந்து அனைவரும் வெளியே அனுப்பப்பட்ட பின் 5.30க்கு ஒலி ஒளிக் காட்சி தொடங்கும்.
1896இல் கட்ட ஆரம்பிக்கப்பட்ட இந்த செல்லுலர் ஜெயில் சுதந்திரப் போராட்ட காலத்தில் இந்திய விடுதலைக்காகப் போராடிய போராளிகளை அடக்கக் கட்டப்பட்டது.
தனித்தனி இருண்ட அறைகள் கொண்ட இந்த ஜெயிலில் அடைபட்ட சுதந்திரப் போராட்ட வீரர்களின் கதைகளைக் கேட்க நமது காதில் குருதி வடியும்.

ஜெயிலில் அடைக்கப்பட்ட வீரர்கள் கடும் தண்டனைக்கு உள்ளானார்கள். செக்கு இழுப்பது, கொப்பரையில் இருந்து எண்ணெய் தயாரிப்பது இவர்களுக்கு அளிக்கப்பட்ட தண்டனைகளுக்குள் கடுமையானவையாகும்.
தண்டனைகளைச் சரிவர நிறைவேற்றாவிட்டால் அவர்கள் உடைகள் களையப்பட்டு முரட்டுச் சாக்கு ஆடைகள் அணிய வேண்டும்.
இது முதல் கட்ட தண்டனை. பின்னரும் அளிக்கப்பட்ட தண்டனைகளை நிறைவேற்றாவிடில் சங்கிலிகளால் பிணைக்கப்படுவார்கள்.

குறைந்த உணவும் குடிநீரும் வழங்கப்பட்ட நிலையில் இந்த தண்டனைகளால் ஜெயிலுக்குள்ளேயே இறந்த வீரர்களும் மனநிலை சிதைந்த வீரர்களும் பலர்.
தண்டனைக் கூடங்கள் சிறைச்சாலைக்கு உள்ளேயே அமைந்துள்ளன. தண்டனைகளை எதிர்த்த பல சுதந்திரப் போராட்ட வீரர்கள் சிறைச்சாலை உள்ளேயே அமைந்துள்ள தூக்குமேடைகளில் தூக்கில் இடப்பட்டனர்.
ஒரே நேரத்தில் மூன்று பேரைத் தூக்கிலிடும் விதத்தில் இந்த தூக்குமேடைகள் அமைந்துள்ளன. இவை அனைத்தையும் பார்க்கும் நமக்கு எவ்வளவு கஷ்டப்பட்டுப் பெற்ற சுதந்திரம் என்பது அர்த்தமாகும்.
ஒலி ஒளிக் காட்சிகள் செல்லுலர் ஜெயிலில் ஒவ்வொரு நாளும் மூன்று காட்சிகள் நடைபெறுகின்றன. இரு காட்சிகள் இந்தியிலும் ஒரு காட்சி ஆங்கிலத்திலும் நடைபெறுகிறது.
ஐந்நூறு நபர்கள் ஒவ்வொரு காட்சிக்கும் அனுமதிக்கப்படுவதால் ஏமாற்றம் எதிர்கொள்ளாமல் இருக்க ஒலி ஒளிக் காட்சி காண முன்பதிவு செய்துகொள்வது சிறந்தது.

இந்த ஒலி ஒளிக் காட்சி மூலம் கொடுங்கோல் ஆட்சி செய்த ஆங்கிலேய வைசிராய் மாயோவைக் கொலை செய்த இந்தியச் சுதந்திரப் போராளி ஷேர் அலி அஃப்ரிடி பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
அந்தமானில் தவறவிடக்கூடாத இடம் இந்த செல்லுலர் சிறைச்சாலையும் அதில் நடைபெறும் ஒலி ஒளி காட்சியும்.
ஒலி ஒளி காட்சி முடிந்து கனத்த மனதுடன் வெளியே வந்தோம்.
இரவு உணவுடன் நாள் ஒன்று முடிவடைந்தது.
உணவைப் பொறுத்தவரை அந்தமானில் நல்ல கடல் உணவு அபரிமிதமாகக் கிடைத்தாலும் நல்ல வெஜிட்டேரியன் உணவும் கிடைக்கும்.
பயணம் தொடரும்,
அன்புடன்
எஃப்.எம் போனோ
(எஃப்.மரிய பொனவெஞ்சர்)
My Vikatan-க்கு உங்களது `சுற்றுலா’ கட்டுரை

இனி வாசகர்கள் விகடன் அறிவிக்கும் மாதாந்திர தலைப்பை மையப்படுத்தி கட்டுரைகள் அனுப்பலாம்.
இந்த மாதத்திற்கான தலைப்பு – `சுற்றுலா’. சுற்றுலா என்கிற தலைப்பில் My Vikatanக்கு உங்களது கட்டுரை படைப்புகளை அனுப்பலாம். நீங்க சுற்றுலா போன அனுபவமாக இருக்கலாம், பார்க்க வேண்டிய தலங்களாக இருக்கலாம், சுற்றுலா போகும் போது செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்த தகவல்களாகவும் இருக்கலாம். ஆனால், உங்களின் சொந்த படைப்பாக, இதுவரை எந்த தளத்திலும் வெளிவராத படைப்பாக இருக்க வேண்டும், புகைப்படங்களுடன் அனுப்பவேண்டும். தேர்வு செய்யப்படும் கட்டுரைகள் அனைத்தும் பிரசுரம் ஆகும்.
வாசகர்களை உற்சாகப்படுத்தும் நோக்கில், இந்த மாதம் அனுப்பப்படும் பயணக் கட்டுரைகளில் சிறந்த கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது.
பரிசுத்தொகை விவரம்:
-
முதல் பரிசு : ரூ. 2,500 (2 வெற்றியாளர்கள்)
-
இரண்டாம் பரிசு : ரூ. 1000 (5 வெற்றியாளர்கள்)
-
நினைவுப் பரிசு: ₹500 (10 வெற்றியாளர்கள்)
நினைவில் கொள்க:
-
நீங்க கட்டுரையை அனுப்ப வேண்டிய கடைசி நாள் ஏப்ரல் 20, 2025
-
ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கட்டுரைகளை அனுப்பலாம்.
-
உங்கள் படைப்புகளை: [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்
-
விகடனுக்கு என்று பிரத்யேகமாக அனுப்பப்படும் கட்டுரைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும்
-
உங்கள் படைப்பை திருத்தவோ, பிரசுரிக்கவோ, நிராகரிக்கவோ முழு உரிமையும் விகடனுக்கு இருக்கிறது.
-
கட்டுரையின் தரத்தின் அடிப்படையில் வெற்றியாளர்கள் விகடன் நடுவர் குழுவால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.