புதுச்சேரி: அதிமுக-பாஜக கூட்டணி அமைந்தவுடன் முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவரது கூட்டணி கட்சியினர் பயத்தில் பிதற்றி வருகின்றனர் என்று புதுச்சேரி அதிமுக விமர்சித்துள்ளது.
இது குறித்து அக்கட்சியின் மாநில செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: ”சாதி, மத, மொழி ரீதியாக மக்களின் உணர்வுகளை தூண்டி மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் திமுக தலைமையிலான இண்டியா கூட்டணியை அரசியல் அரங்கில் இருந்து அகற்ற, தேசிய சிந்தனையுடைய அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டணி அமைந்தவுடன் திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் அவரது கூட்டணி கட்சியினர் பயத்தில் பிதற்றி வருகின்றனர். திமுக முதல்வரின் பிணாமியாக இருக்கும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமியும் எங்களது கூட்டணியை பொறுத்துக்கொள்ள முடியாமல் சாபம் இடுகிறார்.
தமிழகம் மற்றும் தேசிய அளவில் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட இண்டியா கூட்டணி என்பது ஒரு சந்தர்ப்பவாத கூட்டணி. கொள்கை முரண்பாடுடன் உள்ள கூட்டணி. எந்த ஒரு தொலைநோக்கு சிந்தனையும் இல்லாத அரைவேக்காட்டுத்தனமான கூட்டணி. நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அமைக்கப்பட்ட இண்டியா கூட்டணி அதன் பிறகு டெல்லி, ஹரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி அமைக்காமல் ஆம் ஆத்மி, காங்கிரஸ் உள்ளிட்ட ஆளும் கட்சிகள் காணாமல் போயின.
இண்டியா கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள் கேரளாவில் ஒரு நிலைபாடும், தமிழகத்தில் ஒரு நிலைபாடுமாக உள்ளனர். மேற்கு வங்கத்திலும் இண்டியா கூட்டணியில் இருந்த மம்தா வரும் சட்டப்பேரவை தேர்தலில் தனித்து நிற்போம் என அறிவித்திருந்தார். அந்த அளவுக்கு தேர்தலுக்கு தேர்தல் மக்களை ஏமாற்ற ஒரு சந்தர்ப்பவாத கூட்டணியை அமைத்து வரும் திமுக முதல்வர் ஸ்டாலினுக்கும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நாராயணசாமிக்கும் எங்களது கூட்டணி பற்றி பேச எந்த அருகதையும் இல்லை.
புதுச்சேரியில் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி இணைந்த இண்டியா கூட்டணி என ஒன்று உள்ளதா? ஏதாவது பிரச்சனையில் இவர்கள் இணைந்து அரசை எதிர்த்து போராடியுள்ளனரா? 5 ஆண்டுகாலம் ஆட்சி அதிகாரத்தில் திமுகவுடன் கூட்டணி அமைத்து முதல்வராக இருந்த நாராயணசாமியை புதுச்சேரி திமுகவினர் கடுகளவாவது மதிக்கின்றனரா? புதுச்சேரியில் தினந்தோறும் திமுக-காங்கிரஸ் கட்சிகள் யார் தலைமையில் கூட்டணி என்பதில் வெளிப்படையாக குழாய் அடி சண்டை போட்டுக்கொண்டு இருக்கின்றனர். அதை சரி செய்ய நாராயணசாமியால் முடியவில்லை. மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் அதிமுகவை பாஜக விழுங்கிவிடும் என்கிறார்.
எடப்பாடி பழனிச்சாமி குளத்து மீன் இல்லை. பெருங்கடலை ஆளும் திமிங்கலம் போன்றவர். அதனால் தான் ஒரு காலத்தில் பிரதமர் மோடி, ஜெயலலிதாவின் வீட்டிற்கு வருகை தந்தார். அது போல் தான் சர்வ வல்லமை படைத்த நம் நாட்டின் உள்துறை அமைச்சர் அமித்ஷா, பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வீட்டுக்கு வருகை தந்ததை நாராயணசாமி உணராமல் பேசுகிறார். நாராயணசாமிக்கு நாவடக்கம் வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.