Abhishek Sharma : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன் அபிஷேக் சர்மா பற்றிய ரகசியத்தை முதன்முறையாக டிராவிஸ் ஹெட் ஓபனாக தெரிவித்துள்ளார். ஐபிஎல் 2025 தொடரின் 27வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை பதற வைத்து அபார வெற்றியை பெற்றது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. பஞ்சாப் முதல் பேட்டிங் ஆடி 245 ரன்கள் குவித்த நிலையில், 2வது பேட்டிங் ஆடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 18.3 ஓவர்களிலேயே அந்த இலக்கை எட்டி வரலாற்று வெற்றியை பதிவு செய்தது. ஐபிஎல் வரலாற்றில் இது இரண்டாவது அதிகபட்ச ரன் சேஸிங் இதுவாகும். இதற்கு முழுக்க முழுக்க காரணம் அபிஷேக் சர்மாவும், டிராவிஸ் ஹெட்டும் தான் காரணம்.
சன்ரைசர்ஸ் அணிக்காக ஓப்பனிங் இறங்கிய இருவரும் ஆரம்பம் முதலே அதிரடி காட்டத் தொடங்கினர். கூடவே அவர்களுக்கு அதிர்ஷ்டமும் கை கொடுத்தது. அபிஷேக் சர்மா ஒருமுறை கேட்ச் கொடுத்து அவுட்டாக, அது நோ பாலாக மாறியது. பின்னர் பஞ்சாப் அணியினரே இரண்டு கேட்சுகள் மற்றும் ஒரு ரன்அவுட் வாய்ப்பை வீண்டித்து அபிஷேக் சர்மாவுக்கு வாய்ப்பை கொடுத்தனர். அங்கிருந்து புயலாக உருவெடுத்த அபிஷேக் சர்மா, பேட்டில் பட்ட பந்துகளை எல்லாம் சிக்சருக்கும் பவுண்டரிக்கும் விளாசினார். மறுமுனையில் டிராவிஸ் ஹெட்டும் அதிரடி காட்ட சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ரன்கள் ராக்கெட் வேகத்தில் எகிறிக் கொண்டிருந்தது.
டிராவிஸ் ஹெட் 37 பந்துகளில் 66 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க அபிஷேக் சர்மா 55 பந்துகளில் 141 ரன்கள் குவித்தார். இதில் 10 சிக்சர்களும், 14 பவுண்டரிகளும் அடங்கும். இவரின் மெகா அதிரடி ஆட்டம் காரணமாக ஹைதராபாத் மைதானமே ஒரே கோலாலகமாக இருந்தது. குறிப்பாக சன்ரைசர்ஸ் அணியின் ஆரஞ்சு ஆர்மி உற்சாகத்தில் துள்ளிக் குதித்தனர். கொண்டாட்டத்தில் குதூகலித்தனர். அவர்களுகாக்கவே அபிஷேக் சர்மா, தான் சதமடித்ததும் This Is For Orange Army என்ற வாசகம் எழுதிய பேப்பரை காண்பித்து தன்னுடைய சத த்தை சன்ரைசர்ஸ் ரசிகர்களுக்கு சமர்பித்தார்.
இது குறித்து போட்டிக்குப் பிறகு பேசிய டிராவிஸ் ஹெட், இந்த பேப்பரை அபிஷேக் சர்மா 6 போட்டிகளாக தன்னுடைய பாக்கெட்டில் வைத்திருப்பதாக கூறினார். அபிஷேக் எப்படியும் சதமடிப்பேன் என்பதை முன்பே தீர்மானித்தே ஐபிஎல் மேட்சுகளை ஆடினார் என்று கூறிய டிராவிஸ் ஹெட், கடந்த சில போட்டிகளாக அது அவருக்கு சரியாக அமையவில்லை என கூறினார். மேலும் இப்போட்டியில் மீண்டும் பார்முக்கு திரும்பிவிட்டார், அவருடன் பேட்டிங் ஆடியது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்தார்.
தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்து வந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பியிருக்கிறது. இந்த தொடரில் எஸ்ஆர்ஹெச் அணி இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ளது. இது அந்த அணிக்கு இரண்டாவது வெற்றியாகும். இதன் மூலம் புள்ளிப் பட்டியலில் 8வது இடத்தில் நீடிக்கிறது.