அமலாக்கத் துறை அறிக்கையை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம்: திமுக

நகராட்சி நிர்வாகத் துறையில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளதை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம் என்று திமுக சட்டப் பிரிவுச் செயலாளர் என்.ஆர்.இளங்கா தெரிவித்துள்ளார்.

தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறை சமீபத்தில் சோதனை நடத்தியது. இது தொடர்பான அறிக்கையை நேற்று முன்தினம் வெளியிட்டது. அதில், நகராட்சி நிர்வாகத் துறையில் முறைகேடுகள் நடைபெற்று ள்ளதாக தெரிவித்தது.

இந்நிலையில், இதற்கு பதிலளித்து, திமுக சட்டத் துறைச் செயலர் என்.ஆர்.இளங்கோ வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பாஜகவை கொள்கை ரீதியாக தொடர்ந்து எதிர்க்கும் கட்சிகளையும், மாநில அரசுகளையும் பழிவாங்குவதற்காக, மத்திய அமைப்புகளை ஆயுதங்களாகப் பயன்படுத்தும் மத்திய அரசின் மேலும் ஒரு நடவடிக்கையாக, பத்து ஆண்டுகளுக்கு முந்தைய வங்கிக் கடன் வழக்கை தூசிதட்டி எடுத்து, எவ்வித ஆதாரமின்றி தமிழக அரசின் நகராட்சி நிர்வாகத் துறை பற்றிய பல தவறான தகவல்களை அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.

சென்னையில் மேற்கொள்ளப்பட்ட அமலாக்கத் துறை நடவடிக்கையானது, ஒரு தனியார் நிறுவனம் வாங்கிய வங்கிக் கடன் பற்றியதாகும். இந்த கடன் தொகை முழுவதும் வட்டியோடு திருப்பி செலுத்தப்பட்டுள்ள நிலையில், இதில் எந்தவிதமான முறைகேடும் இல்லை. மேலும், இந்த வழக்கை சிபிஐ அமைப்பு விசாரிப்பதற்கு, முதல் ஆதாரம் எதுவுமில்லை என்று கூறஇ, சென்னை உயர் நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்கெனவே தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அமலாக்கத் துறை விசாரணையிலும் எள்ளளவு ஆதாரமும் கிடைக்காத ஏமாற்றத்தில், எந்த முகாந்திரமும் இன்றி, நகராட்சி நிர்வாகத் துறையில் பல முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், சட்டத்துக்குப் புறம்பான பணப் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இத்துறை கதைகட்டியுள்ளது.

நகராட்சி நிர்வாகத் துறையின் நடவடிக்கைகள் தொடர்பாக, எவ்வித முதல் தகவல் அறிக்கையோ, குற்றப் பத்திரிக்கையோ, வழக்கோ நிலுவையில் இல்லாத போது, இந்தத் துறை பற்றி விசாரணை செய்வதற்கு அமலாக்கத் துறைக்கு எவ்விதமான அதிகாரமும் இல்லை. இந்த நிலையில், புதிதாக சேர்ந்துள்ள கூட்டணிக் கட்சியை திருப்திப் படுத்துவதற்காக, ஆதாரமற்ற இத்தகைய குற்றச்சாட்டுகளை அமலாக்கத் துறை முன்வைத்துள்ளது கடும் கண்டனத்துக்கு உரியது.

அரசியல் உள்நோக்கத்தோடு, சட்டத்துக்குப் புறம்பான இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டு, ஆதாரங்களின்றி, ஊழல் நடப்பதாக பொத்தாம் பொதுவாக அறிக்கை விடுவது அமலாக்கத் துறைக்கு வாடிக்கையாகிவிட்டது. சட்டப் பூர்வகமாக செயல்பட வேண்டிய அமலாக்கத் துறையானது, மத்திய பாஜக அரசின் கைப்பாவையாக மாறி, இப்படி அரசியல் அறிக்கைகளை வெளியிடுவது அத்துறைக்கு அழகும் அல்ல, சட்டப்படி ஏற்கத்தக்கதும் அல்ல. இத்தகைய அரசியல் ரீதியான பழிவாங்கும் நடவடிக்கைகள் அனைத்தையும், தேவைப்படும் சட்ட நடவடிக்கை கள் மூலமாக எதிர்கொண்டு முறியடிப்போம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.