கீவ்,
உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் உள்ள இந்திய மருந்து நிறுவனத்தின் கிடங்கில் ரஷியா ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. ரஷியா வேண்டும் என்றே இந்திய நிறுவனங்களின் தொழில்களை குறிவைத்து தாக்குதல் நடத்துவதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.
இது தொடர்பாக உக்ரைன் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- உக்ரைனில் உள்ள குசும் (Kusum) என்ற மருந்து நிறுவனத்தின் கிடங்கு மீது ரஷியா ஏவுகணை வீசி தாக்கியுள்ளது. இந்தியாவுடன் சிறந்த நட்புறவை கடைபிடித்து வருவதாக கூறி வரும் ரஷியா, இந்திய வணிகங்களின் மீது வேண்டும் என்றே தாக்குதல் நடத்தி வருகிறது.குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்காக வைக்கப்பட்டு இருந்த மருந்துகளை அழித்து இருக்கிறது” என்று கூறப்பட்டு உள்ளது.
குசும் மருந்து நிறுவனம், இந்திய தொழில் அதிபர் ராஜீவ் குப்தாவிற்கு சொந்தமானது. உக்ரைனில் உள்ள மிகப்பெரிய மருந்து நிறுவனங்களில் இதுவும் ஒன்றாகும். அடிப்படை மருந்துகளை உக்ரைன் முழுவதும் இந்த நிறுவனம் விநியோகம் செய்து வருவதால், இந்த தாக்குதல் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது. டிரோன் மூலமாக நேரடியாக குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் உக்ரைனிய அதிகாரிகள் சொன்னதாக தகவல்கள் கூறுகின்றன.