பொறுமையில் பூமித்தாயைப் போன்றவர் நீங்கள். திட்டமிட்டுக் காரியம் சாதிப்பதில் வல்லவர் நீங்கள். உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டில் விசுவாவசு தமிழ்ப்புத்தாண்டு பிறக்கிறது. இந்தப் புத்தாண்டில் உங்களுக்கான துல்லியமான 15 பலன்களை விவரிக்கிறார் ஜோதிடரத்னா முனைவர் கே.பி.வித்யாதரன்.
1. தோற்றப்பொலிவும், எவரையும் தங்களின் பேச்சுக்குக் கட்டுப்படச் செய்யும் வல்லமையும் கொண்ட ராசிக்காரர் நீங்கள். உங்களின் அறிவுத் திறமையைப் பயன்படுத்தி அதிக லாபம் சம்பாதிப்பீர்கள். உடலுழைப்பு குறைவாகவே இருக்கும். உங்கள் ராசிக்கு 2-வது ராசியில் தமிழ்ப் புத்தாண்டு பிறக்கிறது. உங்கள் நீண்டநாள் ஆசைகள், விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறப்போகும் ஆண்டாக இது அமையவுள்ளது எனலாம்.
2. மனோகாரகனாகிய சந்திர பகவான் உங்கள் ராசிக்குத் தன ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் வேளையில் புதிய ஆண்டு பிறப்பதால், நீங்கள் தொட்டதெல்லாம் துலங்கும். எதிர்பார்த்த விஷயங்கள் எல்லாம் வெற்றியில் முடியும். சோர்வு நீங்கும்; தன்னம்பிக்கை பிறக்கும்.

3. இந்த விசுவாவசு ஆண்டில், உங்கள் மனதிலிருந்த திட்டங்கள் செயல்பாட்டுக்கு வரும். புதிய காரியங்கள் வேகவேகமாக நிறைவு பெறும். நீங்கள் முன்னேறுவதுடன், உங்களைச் சார்ந்தோரையும் முன்னேற்றும் வகையில் புதிய பாதை புலப்படும்.
4. இதுவரையிலான சறுக்கலுக்கும் தோல்விகளுக்குமான காரணத்தைக் கண்டறிவீர்கள். உங்கள் கால்களைக் கட்டிப்போட்ட தடைகளை இனம் கண்டு அகற்றுவீர்கள் உண்மையில்லாத உறவுகளை ஒதுக்கித் தள்ளுவீர்கள். வி.ஐ.பி. நட்புகளைச் சரியானபடி பயன்படுத்திக் கொள்வீர்கள்.
5. உங்களுக்கு இந்த ஆண்டில் நடக்கவுள்ள ராகு-கேது பெயர்ச்சி சிறப்பான பலன்களைத் தரவுள்ளது. ஏப்ரல் – 26 முதல் ராகு 7-ல் இருந்து விலகி 6-ம் இடத்துக்கு வருவதால் திடீர் பண வரவு உண்டாகும். உங்களை வாட்டி வதைத்த கடன் பிரச்னைகள் தீரும்.
6. குடும்பத்தில், மனைவி-மக்கள், பெற்றோரின் தேவைகளைக் கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். புதிய டிசைனில் ஆபரணங்களை வாங்குவீர்கள். மகளின் திருமணத்தைச் சிறப்பாக நடத்தி முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்களைப் புரிந்துகொள்வார்கள். தந்தைவழி உறவினர்களால் ஏற்பட்ட சிக்கல்கள் தீரும்.
7. குடும்பத்தில் ஒற்றுமை ஓங்கும். வீண் சந்தேகம், ஈகோவால் பிரிந்த கணவன்-மனைவி ஒன்று சேர்வார்கள். வாழ்க்கைத்துணையின் ஆரோக்கியம் மேம்படும். வீட்டிற்குத் தேவையான பொருள்கள் வாங்குவீர்கள்.
8. வெளியூர்ப் பயணங்கள் திருப்திகரமாகும். மனைவிவழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. பணப் பற்றாக்குறையால் பாதியிலேயே நின்றுபோன கட்டடப் பணிகள், இனி முடிவடையும். சொத்து சம்பந்தப்பட்ட வழக்குகள் சாதகமாகும்.
9. ஏப்ரல் – 26 முதல் கேது ராசியை விட்டு விலகுவதால், முன் கோபம் விலகும். தாழ்வு மனப்பான்மை, விரக்தி நிலை போன்றவை மாறும். உடல் சோர்வு, அசதி நீங்கி சுறுசுறுப்படைவீர்கள். அகத்திலும் புறத்திலும் இளமையான எண்ணங்களும் தோற்றப் பொலிவும் உண்டாகும்.

10. குடும்பத்தில் பிரிந்திருந்த தம்பதி ஒன்று சேர்வார்கள். கணவன் மனைவிக்கு இடையே இருந்துவந்த மனஸ்தாபங்கள் விலகும். குடும்பத்தில் குதூகலம் நிறையும். எல்லாவற்றிலும் வெற்றி உண்டு. மகனுக்குத் தடைப்பட்ட திருமணம் முடியும். மருத்துவச் செலவுகள் குறையும்.
11. எதிலும் பிடிப்பில்லாமல் இருந்த நிலை மாறும். அனைத்திலும் ஆர்வம் பிறக்கும். உடன்பிறந்தவர்களிடையே சின்ன சின்ன மனஸ்தாபங்கள் வந்து போனாலும் ஒற்றுமை குறையாது. பூர்வீகச் சொத்து சம்பந்தப்பட்ட பிரச்னைகள் தீரும்.
12. எனினும் குருபகவான் 10-ம் இடத்துக்கு வருவதால், தொழிலிலும் பணியிலும் அதீத கவனம் தேவை. வீண் விமர்சனங்கள், செலவுகளைக் குறைத்துக்கொள்வது நல்லது. புதிய வாய்ப்புகளை ஏற்பதில் தகுந்த ஆலோசனையும் வழிகாட்டலும் தேவைப்படும்.
13. வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். வேலையாட்கள் முழு ஆதரவு கொடுப்பார்கள். கொடுக்கல்-வாங்கலில் நிம்மதி ஏற்படும். உத்தியோகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவீர்கள். எனினும், குருபகவான் 10-க்கு வருவதால், தொழிலில் பெரிய முதலீடுகள் வேண்டாம்.
14. உத்தியோகத்தில், மேலதிகாரிகளிடம் நிதானத்துடன் பேச வேண்டும். அவர்களிடம் அதீத உரிமை எடுத்துக்கொள்ள வேண்டாம். அடுத்தவர் விஷயத்தில் தலையிடக் கூடாது. பணியில் கவனம் செலுத்தவேண்டிய காலம் இது.
15. அருகிலுள்ள சிவாலயங்களில் அருளும் பைரவ மூர்த்திக்கு, தேய்பிறை அஷ்டமி நாளில் வடைமாலை சாற்றி வழிபடுங்கள்; எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். தடங்கல்கள் நீங்கி காரியஜெயம் உண்டாகும்.