அதிமுக – பாஜக கூட்டணி அறிவிப்பு கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த அக்கட்சி நிர்வாகிகளுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், கொங்கு மண்டலத்தில் இந்த கூட்டணி ஏற்படுத்தப் போகும் பாதிப்பு, அமித் ஷாவின் கூட்டணி ஆட்சி அறிவிப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ‘இந்து தமிழ் திசை’யிடம் பேசினார் கொமதேக பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்எல்ஏ.
அதிமுக – பாஜக கூட்டணியை இவ்வளவு சீக்கிரம் அறிவிப்பார்கள் என எதிர்பார்த்தீர்களா?
கடந்த 15 நாட்களுக்கு முன்பு, அமித் ஷாவை பார்க்க இபிஎஸ் செல்வார் என்று மக்கள் எதிர்பார்க்கவில்லை. அந்த சந்திப்புக்கு பிறகு கூட்டணி குறித்து இபிஎஸ் எதுவும் சொல்லவில்லை என்றாலும், பேச்சுவார்த்தை நடப்பதாக அமித் ஷா வெளிப்படையாக தெரிவித்து விட்டார். அதன் தொடர்ச்சிதான் தற்போதைய அறிவிப்பு.
அதிமுக தலைமையை மிரட்டி, இந்தக் கூட்டணியை பாஜக அமைத்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளாரே?
கடந்த காலங்களில், “பாஜக-வுடன் கூட்டணி இல்லை” என்று சொன்னார் இபிஎஸ். பிறகு, “தேர்தல் கூட்டணி வேறு, கொள்கை வேறு” என்றார். அமித் ஷாவுடனான சந்திப்புக்குப் பிறகு, “6 மாதம் கழித்துத்தான் கூட்டணி குறித்த முடிவு எடுக்கப்படும்” என்றார். இப்படிச் சொன்னவர்கள் தற்போது இவ்வளவு அவசரமாக கூட்டணியை அறிவிக்கிறார்கள் என்றால் அதற்கு நிர்பந்தம் தான் காரணமாக இருக்கும். எனவே, முதல்வர் சொல்வது சரியானதே.
பாஜக-வுடன் திமுக மறைமுக கூட்டணி அமைத்துள்ளது. அதிமுக நிர்பந்த கூட்டணி அமைத்துள்ளது என்கிறாரே விஜய்?
பாஜக-வுடன் திமுக கூட்டணி என்று சொல்வது நம்புகிற மாதிரியா இருக்கிறது? யாரோ எழுதிக் கொடுப்பதை அவர் சொல்கிறார். நானும் களத்தில் இருக்கிறேன், நானும் ஒரு அரசியல் தலைவர் என்ற அடிப்படையில் இது போன்ற கருத்துகளை தெரிவித்து ஊடக வெளிச்சம் பெற விஜய் முயற்சிக்கிறார்.
2026-ல் திமுக-வுக்கும் தவெக-வுக்கும் தான் போட்டி என்கிறாரே விஜய்..?
அதிமுக-வினர் தவெக கூட்டணியை எதிர்பார்த்தார்கள். அது நடக்கவில்லை. ஒருவேளை, அதிமுக-வுடன் கூட்டணி வைத்திருந்தால் தவெக-வுக்கு ஓர் எதிர்காலம் இருந்திருக்கும். தற்போது கூட்டணி வேறு மாதிரி உருவாகி இருப்பதால், தவெக-வின் எதிர்காலம் கேள்விக்குறிதான்.
அண்ணாமலையின் தலைவர் பதவியை பறிக்க, அதே கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த இபிஎஸ் காரணமாகிவிட்டாரே?
பொதுவாக தேசியக் கட்சிகளைப் பொறுத்தவரை, மாநிலத் தலைவர்கள் செல்வாக்கை வளர்த்துக் கொள்வதை விரும்புவதில்லை. தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை இருந்தபோது, அவர் தன்னை வளர்த்துக் கொண்டார். அவர் கட்சியை வளர்த்தார் என்று சொல்ல முடியாது. இப்படி, ஒரு மாநில தலைவர் வளர்ந்தால் எதிர்காலத்தில் பிரச்சினையாகும் என்பது தேசியக் கட்சிகளுக்கு தெரியும். அப்படி ஒரு சூழலில் தான் இந்த மாற்றம் நடந்துள்ளது. அண்ணாமலையை மாற்ற வேண்டும் என அதிமுக கோரிக்கை வைத்தது. அதையே வைத்து பாஜக அண்ணாமலையை வீழ்த்தி விட்டது. இது காக்கை உட்கார பனம் பழம் விழுந்த கதைதான்.
கடந்த காலத்தில் அதிமுக – பாஜக கூட்டணி கொங்கு மண்டலத்தில் பெரும் வெற்றியை பெற்றுள்ளது. 2026-ல் இந்தக் கூட்டணியை திமுக கூட்டணி எப்படி சமாளிக்கப் போகிறீர்கள்?
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலை மட்டும் கணக்கில் வைத்து இது போன்ற கருத்து பரப்பப்படுகிறது. 2019 மற்றும் 2024-ல் யார் வெற்றி பெற்றார்கள் என்று பார்க்க வேண்டும். 2021-ல் அதிமுக ஒன்றுபட்டு இருந்தது. முதலமைச்சராக இபிஎஸ் தேர்தலை சந்தித்தார். அன்று பாமக வலுவாக இருந்தது. இப்போது எப்படி இருக்கிறது என்று உங்களுக்கு தெரியும். பாஜக தலைவர் பதவியும் நெல்லை மாவட்டத்துக்குச் சென்று விட்டது. இப்படி பல மாற்றங்கள் நடந்துள்ளன. அதோடு, ஐந்தாண்டு கால திமுக ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. பெண்கள், அடித்தட்டு மக்களின் தேவைகள் நிறைவேற்றப்பட்டுள்ளதால், திமுக கூட்டணி தான் வெற்றி பெறும்.
தமிழகத்தில் குறைந்தபட்ச செயல்திட்டத்தின் கீழ் என்டிஏ கூட்டணி ஆட்சி என்ற அமித் ஷாவின் அறிவிப்பை எப்படி பார்க்கிறீர்கள்..?
இபிஎஸ் தலைமையில் தேர்தலை சந்திப்போம் என்று சொன்ன அமித் ஷா, இபிஎஸ் தான் முதலமைச்சர் என்று எங்காவது சொன்னாரா? பழனிசாமி முதல்வராக வருவதை பாஜக அனுமதிக்காது. தேர்தலுக்கு முன்பாக ஒரு நிலைப்பாடு, தேர்தலுக்கு பின்னால் ஒரு நிலைப்பாடு என்பது பாஜக-வின் கடந்த கால வரலாறு. இதற்கு பல மாநிலங்களை உதாரணமாக கூறலாம். தேர்தலுக்கு பின் ஒருவேளை அதிமுக அதிக தொகுதிகளில் வென்றால், எம்எல்ஏ-க்களை விலைக்கு வாங்கி ஆட்சி அமைக்கவும் பாஜக தயங்காது. இப்போதே செங்கோட்டையன் மூலம் இபிஎஸ்ஸுக்கு செக் வைத்த பாஜக, தேர்தலுக்கு பின் அவரை முதல்வராக ஏற்பார்கள் என்று எப்படி நம்ப முடியும்?
தமிழக அரசின் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை பட்டியலிட்ட அமித் ஷா, முதல்வர் ஸ்டாலின், உதயநிதி ஆகியோர் இதற்கு பதில் சொல்ல வேண்டி இருக்கும் என்கிறாரே..?
கடந்த 2016-ல் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீது இல்லாத குற்றச்சாட்டா? குற்றம் நிரூபிக்கப்பட்டு, சிறை சென்று வந்த ஜெயலலிதா வெற்றி பெற்று மீண்டும் முதல்வர் பதவியில் அமரவில்லையா? எனவே, அரசியல் ரீதியான இத்தகைய குற்றச்சாட்டுகளை பொருட்படுத்த தேவையில்லை.
திமுக-விடம் ஆட்சியில் பங்கு கேட்க முடியாவிட்டாலும் குறைந்தபட்சம் கூடுதல் தொகுதிகளையாவது கேட்க வாய்ப்புள்ளதா?
கூட்டணி ஆட்சி என்பது யதார்த்தம் தெரியாமல் பேசுவது தான். தமிழகத்தில் ஒரு திராவிட கட்சி பலவீனமானால் மட்டும் தான் கூட்டணி ஆட்சி என்ற பேச்சு எழும். தற்போது அதிமுக பலவீனம் ஆகிவிட்டது என்பதால், கூட்டணி ஆட்சி என்ற அறிவிப்பு வருகிறது. நாம் பலவீனமாகிவிட்டோம் என்பதை அதிமுக-வும் உணர்ந்து விட்டது. தொகுதிகள் எண்ணிக்கை எல்லாம் தேர்தல் நேரத்தில் பேச வேண்டியது.
அமைச்சர் பொன்முடியின் அருவருக்கத்தக்க பேச்சையும் அவர் மீது முதல்வர் எடுத்த நடவடிக்கையையும் எப்படி பார்க்கிறீர்கள்?
பொன்முடி போன்ற மூத்த அமைச்சர்கள் இதுபோன்று பேசுவது ஏற்புடையதல்ல. இதனை கொமதேக ஏற்கெனவே கண்டித்துள்ளது. இந்த விஷயத்தில் முதல்வரின் நடவடிக்கை வரவேற்கக் கூடியதே.
திமுக கரை வேட்டி கட்டியவர்கள், நெற்றியில் பொட்டு வைத்துக் கொள்ளக்கூடாது, கைகளில் கயிறு கட்டிக்கொள்ளக் கூடாது என்றெல்லாம் திமுக எம்பி-யான ஆ.ராசாவும் கூறி வருகிறாரே..?
2021 தேர்தலுக்கு முன்பாக ஆ.ராசா பேசிய கருத்துகள் தவறாக இருந்ததால், நான் கண்டித்துள்ளேன். இது போன்ற தேவையில்லாத பேச்சுகளை தவிர்க்க வேண்டும். இது போன்ற கருத்துகள் மக்கள் மத்தியில் பரவும்போது, திமுக மீது இருக்கும் நம்பிக்கை குறையும். இது போன்ற அவதூறு பேச்சுகளை தடுக்க, முதல்வர் ஸ்டாலின் இன்னும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
ஆளுநர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு தமிழக முதல்வரின் வெற்றியாக பார்க்கப்படுகிறது. இதில் தோற்றது யார்?
டெல்லியில் இருந்து ஆளுநரை ஆட்டுவித்தனர். அதன்படி அவர் செயல்பட்டார். எனவே, இந்த சட்டப் போராட்டத்தில் பாஜக தான் தோற்றுள்ளது. தோல்வி ஆளுநருக்கு அல்ல; பாஜக-வுக்குத்தான்.
மக்களவையில் வக்பு வாரிய மசோதா தாக்கலான போது, அதனை எதிர்த்து கொமதேக எம்பி வாக்களிக்காமல் வெளியேறியது சர்ச்சையானதே..?
இது தொடர்பாக எம்பி-யான மாதேஸ்வரன் என்னிடம் விளக்கம் அளித்துள்ளார். அன்று இரவு 8 மணி வரை மக்களவையில் இருந்த அவர், உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டி இருந்தது. அதனால் வாக்கெடுப்பில் பங்கெடுக்க முடியவில்லை.
பிரதமர் விழாவில் பங்கேற்காமல், வள்ளி கும்மி நடனம் பார்க்க முதல்வர் ஸ்டாலின் முக்கியத்துவம் கொடுத்ததாக மத்திய அமைச்சர் எல்.முருகன் விமர்சனம் செய்துள்ளாரே?
பிரதமர் நிகழ்ச்சியில் முதல்வர் ஏன் கலந்து கொள்ளவில்லை என்பதற்கான காரணத்தை அவர்கள் தான் சொல்ல வேண்டும். ஆனால், வள்ளி கும்மி நிகழ்ச்சியை, ‘மானாட மயிலாட’ நிகழ்ச்சியைப் போல், எண்ணிக் கொண்டு மத்திய அமைச்சர் முருகன் கொச்சைப்படுத்தி பேசியுள்ளார். 10 ஆயிரம் பெண்கள் ஒன்றிணைந்து கோவையில் வள்ளி கும்மி நிகழ்ச்சியை நடத்தினர். அதோடு, 16 ஆயிரம் பெண்கள் வள்ளி கும்மி ஆடி, கின்னஸ் சாதனை படைத்துள்ளனர். அவர்களின் உணர்வுகளை மதித்து முதல்வர் ஸ்டாலின் அந்நிகழ்வில் பங்கேற்று சான்றிதழ்களை வழங்கினார்.
இதற்காக எல்.முருகன் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று தெரிவித்துள்ளீர்களே..?
வள்ளி கும்மி என்பது முருகனை வாழ்த்திப் பாடுவதுதான். பெயரில் முருகனை வைத்துக் கொண்டு, வேல் யாத்திரை நடத்திய எல்.முருகன், வள்ளி கும்மி நடனத்தை வேறு ஏதோ நடனத்துக்கு இணையாக ஒப்பிட்டுப் பேசியதை ஏற்க முடியாது. ஆகவே, கொங்கு நாட்டு மக்கள் மத்தியில் மத்திய அமைச்சர் எல்.முருகன் கட்டாயம் மன்னிப்புக் கேட்கத்தான் வேண்டும்.
வள்ளி கும்மி நடனம் தொடர்பாக தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகள் வருகின்றனவே..?
இந்த நிகழ்ச்சி மூலம் கொங்கு மண்டலத்தில் பெண்கள் ஒற்றுமைப்படுகிறார்கள். அந்த ஆதங்கத்தில், இது சாதி ரீதியாக நடப்பதாக அவதூறு பரப்புகின்றனர். யாரோ சிலர் யூடியூபில் பேசினால் அது உண்மை ஆகாது. வள்ளி கும்மி ஒற்றுமையை ஏற்படுத்துமே தவிர, பிரிவினையை ஏற்படுத்தாது.
தமிழக ஜிடிபி-யில் கொங்கு மண்டலம் அதிகம் பங்கு வகிக்கிறது. கொங்கு மண்டலத்தின் பிரச்சினைகளை தீர்ப்பதில் தமிழக அரசு போதுமான முக்கியத்துவம் கொடுக்கிறதா?
கொங்கு மண்டலத்திற்கு தேவைப்படும் பல்வேறு திட்டங்களை முதல்வரும், அமைச்சர்களும் செய்து வருகிறார்கள். அதிக நிதி தேவைப்படும் நீர்ப்பாசன திட்டங்களை நிறைவேற்றுவதில் தான் தாமதம் ஏற்படுகிறது.
கோவை, ஈரோடு, சேலம் மாவட்டங்களை பிரிக்க வேண்டும் என்ற உங்களது நீண்ட நாள் கோரிக்கை அப்படியே இருக்கிறதே?
தமிழக முழுவதும் எட்டு மாவட்டங்களை பிரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே பிரிக்கப்பட்ட மாவட்டங்களே, போதுமான நிதி ஒதுக்கீடு இல்லாததால், தடுமாறிக் கொண்டு இருக்கின்றன. ஆனாலும், கோவை, ஈரோடு, சேலம் மாவட்டங்களை பிரிக்க வேண்டும் என்ற எங்கள் கோரிக்கையை, தேவையை முதல்வர் உணர்ந்துள்ளார். நிதி பற்றாக்குறையால் தாமதம் ஆகிறது.