எனது பேச்சால் மனம் புண்பட்ட அனைவரிடமும் மீண்டும் மீண்டும் மன்னிப்பு கோருகிறேன் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வனத்துறை அமைச்சர் பொன்முடி பேசும்போது சைவம், வைணவம், விலைமாதர்கள் குறித்து தெரிவித்த கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தின. அமைச்சரின் கருத்தை கனிமொழி எம்.பி. கண்டித்த நிலையில், பொன்முடியின் திமுக துணை பொதுச்செயலாளர் பதவி பறிக்கப்பட்டு திருச்சி சிவா எம்.பி. நியமிக்கப்பட்டார்.
தொடர்ந்து பல தரப்பினராலும் பொன்முடியின் பேச்சு விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில், நேற்று அவர் வெளியிட்ட விளக்க அளிக்கையில கூறியிருப்பதாவது: பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஒரு உள்அரங்கக் கூட்டத்தில், தகாத பொருளில் தவறான சொற்களைப் பயன்படுத்தி நான் பேசிய பேச்சுக்கு மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். இந்தத் தகாத கருத்தை நான் பேசியது குறித்து உடனடியாக மனப்பூர்வமாக வருந்தினேன். நீண்டகாலம் பொது வாழ்க்கையில் உள்ள எனக்கு இதுபோன்ற தடுமாற்றம் ஏற்பட்டது குறித்து நான் மிகவும் வருந்துகிறேன்.
பலருடைய மனதைப் புண்படுத்தும் வகையில் இப்பேச்சு அமைந்துவிட்டது குறித்தும், அவர்கள் தலைகுனியும் சூழல் ஏற்பட்டது குறித்தும் நான் மிகவும் மனம் வருந்துகிறேன். மனம் புண்பட்ட அனைவரிடமும் நான் பேசிய பேச்சுக்கு மீண்டும் மீண்டும் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.