மும்பை தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தான் தீவிரவாதி தஹாவூர் ராணா, துபாயில் ஐஎஸ்ஐ உளவாளியை ரகசியமாக சந்தித்து பேசியிருப்பது என்ஐஏ விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி மும்பையின் பல்வேறு இடங்களில் பாகிஸ்தானின் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 166 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் தொடர்புடைய பாகிஸ்தான் தீவிரவாதி தஹாவூர் ராணா அண்மையில் அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டார். அவரை 18 நாட்கள் காவலில் விசாரிக்க தேசிய புலனாய்வு அமைப்புக்கு (என்ஐஏ) டெல்லி நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. இதன்படி கடந்த சில நாட்களாக ராணாவிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து என்ஐஏ வட்டாரங்கள் கூறியதாவது:
பாகிஸ்தான் ராணுவத்தில் மூத்த மருத்துவராக தஹாவூர் ராணா பணியாற்றினார். பின்னர் ராணுவத்தில் இருந்து விலகி கடந்த 1990-ல் அவர் கனடாவில் குடியேறினார். இதன்பிறகு அமெரிக்காவின் சிகாகோ நகரில் குடியேற்ற ஆலோசனை வழங்கும் நிறுவனத்தை தொடங்கினார்.
மும்பை தாக்குதலில் தொடர்புடைய டேவிட் ஹெட்லி என்பவரும், ராணாவும் கல்லூரி கால நண்பர்கள் ஆவர். டேவிட் ஹெட்லியின் தந்தை பாகிஸ்தானை சேர்ந்தவர். தாய் அமெரிக்காவை சேர்ந்தவர். கல்லூரி படிப்புக்கு பிறகு டேவிட் ஹெட்லி தனது தாயுடன் அமெரிக்காவில் குடியேறினார். இதன்பிறகு பாகிஸ்தானில் இருந்து போதை பொருட்களை அமெரிக்காவுக்கு கடத்தி வந்தார். இதற்கு பாகிஸ்தான் ராணுவத்தில் பணியாற்றிய தஹாவூர் ராணா உதவி செய்து வந்தார். போதை பொருள் கடத்தலின்போது ஹெட்லி, ராணாவுக்கு லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. அந்த தீவிரவாத அமைப்பில் இருவரும் ரகசியமாக இணைந்தனர்.
பாகிஸ்தான் ராணுவத்தின் மூத்த மருத்துவர் என்பதால் ராணாவுக்கு அந்த நாட்டின் ஐஎஸ்ஐ உளவுத் துறை அதிகாரிகளுடன் மிக நெருங்கிய தொடர்பு இருந்தது. லஷ்கர் இ தொய்பா இயக்கத்தில் தீவிரவாத பயிற்சி டேவிட் ஹெட்லியும் ஐஎஸ்ஐ உடன் நெருங்கிய தொடர்பில் இருந்தார். ராணாவின் குடியேற்ற நிறுவனம் மூலம் இந்திய சுற்றுலா விசா பெற்ற டேவிட் ஹெட்லி கடந்த 2007-ம் ஆண்டில் மும்பைக்கு வந்து வேவு பார்த்தார்.
ஹெட்லியின் தாய் அமெரிக்காவை சேர்ந்தவர் என்பதால் உருவத் தோற்றத்தில் அவர் அமெரிக்கர் போன்று இருந்தார். அவருடைய கிறிஸ்தவ பெயர் காரணமாக இந்திய பயணத்தின்போது அவர் மீது எந்த சந்தேகமும் ஏற்படவில்லை. 2007 முதல் 2008 வரையிலான காலத்தில் 5 முறை மும்பைக்கு டேவிட் ஹெட்லி வந்து சென்றுள்ளார். சில முறை ஹெட்லியுடன் தாஹாவூர் ராணாவும் மும்பைக்கு வந்துள்ளார்.
ஹெட்லியின் உத்தரவின்படி கடந்த 2008-ம் ஆண்டில் ராணாவும் அவரது மனைவியும் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நகருக்கு சென்றுள்ளனர். அங்கு பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவாளியை ரகசியமாக சந்தித்து பேசியுள்ளனர். இந்த சந்திப்பின்போதே மும்பை தாக்குதல் சதித் திட்டம் இறுதி செய்யப்பட்டிருக்கிறது.
துபாயில் ராணா சந்தித்த ஐஎஸ்ஐ உளவாளி யார், மும்பை தாக்குதலில் தொடர்புடைய பாகிஸ்தான் அரசு அதிகாரிகள் யார் என்பது குறித்து ராணாவிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். இவ்வாறு என்ஐஏ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
வழக்கறிஞர்களிடம் விவரம் கேட்ட ராணா: மும்பை சட்ட சேவை ஆணையம் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் பியூஷ் சச்தேவா, லக்சயா ஆகியோர் ராணாவின் வழக்கறிஞர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.
தன் மீதான வழக்கு விசாரணை எவ்வளவு காலம் நீடிக்கும் என்று அவர்களிடம் ராணா கேள்வி எழுப்பி உள்ளார். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய ஓராண்டு ஆகும். வழக்கு விசாரணை நிறைவு பெற 5 முதல் 10 ஆண்டுகள் ஆகலாம் என்று ராணாவிடம் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் ராணா விரக்தி அடைந்தார். தற்போது 64 வயதாகும் அவர் தற்கொலை செய்து கொள்ளும் மனநிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. எனவே அவரது பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது.