சென்னை: கடந்த 2024 டிசம்பரில், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பான முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்), பொது வெளியில் வெளியானது.
அப்போது, கோவையில் டிசம்பர் 26-ம் தேதி செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை ‘‘திமுக ஆட்சியை அகற்றும் வரை காலணி அணிய மாட்டேன்’’ என்று சபதம் எடுத்துக்கொண்டார். இந்நிலையில், தமிழக பாஜக தலைவராக நேற்று பொறுப்பேற்ற நயினார் நாகேந்திரன் விழாமேடையில், ‘‘திமுக ஆட்சியை அகற்றும் வரை காலணி அணிய மாட்டேன் என்று அண்ணாமலைசபதம் ஏற்றார். ஆட்சி மாற்றத்துக்காக அமித் ஷா நேற்றே அடிக்கல் நாட்டிவிட்டார். அதனால், அண்ணாமலை மீண்டும் காலணி அணிந்துகொள்ள வேண்டும்’’ என்று வேண்டுகோள் விடுத்து, புதிதாக வாங்கி வந்த காலணியை அண்ணாமலையிடம் கொடுத்தார். ‘‘வயதில் மூத்தவரான பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விடுத்த வேண்டுகோளை ஏற்றுக் கொள்கிறேன்’’ என்று கூறி, காலணியை அணிந்து கொண்டார் அண்ணாமலை.