புதுடெல்லி: அம்பேத்கரின் 135வது ஜெயந்தி விழாக் கொண்டாட்டங்கள் நாடாளுமன்ற புல்வெளியில் உள்ள பிரேர்னா ஸ்தல்-லில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் குடியரசுத் தலைவர், குடியரசு துணை தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை: அம்பேத்கரின் 135-வது ஜெயந்தி விழாக் கொண்டாட்டங்கள் ஏப்ரல் 14 அன்று புதுடெல்லியில் உள்ள நாடாளுமன்ற புல்வெளியில் உள்ள பிரேர்னா ஸ்தல்-லில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்திய அரசியலமைப்பின் தந்தையாகப் போற்றப்படும் பாபாசாகேப் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் பிறந்த நாளை நினைவுகூரும் இந்த நிகழ்ச்சிக்கு மத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் சார்பில் டாக்டர் அம்பேத்கர் அறக்கட்டளை ஏற்பாடு செய்துள்ளது.
குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைக் குடியரசுத் தலைவர், பிரதமர், மக்களவைத் தலைவர், பிற அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அறிஞர்கள், உள்ளிட்ட பிற அழைக்கப்பட்ட விருந்தினர்கள் காலையில் பாபாசாகேப் அம்பேத்கருக்கு மலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியுடன் கொண்டாட்டங்கள் தொடங்கும்.
அதன் பிறகு, 12:00 மணி வரை பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படும். இந்த பொது நிகழ்ச்சியில், டாக்டர் அம்பேத்கர் தேசிய நினைவிடத்திற்கு பொதுமக்கள் வருகை தந்து அவருக்கு மரியாதை செலுத்துவதற்காக சிறப்பு பேருந்து சேவைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
டாக்டர் அம்பேத்கர் அறக்கட்டளை: பாபா சாகேப் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் கொள்கைகளையும், சித்தாந்தங்களையும் பரப்புவதற்காக டாக்டர் அம்பேத்கர் அறக்கட்டளை நிறுவப்பட்டது. 1991-ம் ஆண்டில், பாபாசாகேப் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் நூற்றாண்டு கொண்டாட்டக் குழு அமைக்கப்பட்டது. அதன் தலைவராக அப்போதைய இந்தியப் பிரதமர் இருந்தார். இந்த குழு டாக்டர் அம்பேத்கர் அறக்கட்டளையை (டிஏஎஃப்) அமைக்க முடிவு செய்தது.
1992 மார்ச் 24 டாக்டர் அம்பேத்கர் அறக்கட்டளை என்ற தன்னாட்சி அமைப்பு, மத்திய சமூக நீதி – அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் கீழ் நிறுவப்பட்டது. பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கரின் தொலைநோக்குப் பார்வைகளையும், சிந்தனைகளையும் நாடு தழுவிய அளவில் முன்னெடுத்துச் செல்வதற்கான திட்டங்களையும் செயல்பாடுகளையும் பரவலாக்குவதற்காக இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது.
டாக்டர் அம்பேத்கர் தேசிய நினைவகம்: புகழ்பெற்ற சமூக சீர்திருத்தவாதி, சொற்பொழிவாளர், சிறந்த எழுத்தாளர், வரலாற்று ஆசிரியர், சட்டவியலாளர், மானுடவியலாளர், அரசியல்வாதி என பன்முகச் சிறப்பு வாய்ந்த பாபா சாகேப் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் வாழ்க்கை, பணி, பங்களிப்புகள் ஆகியவை தொடர்பான ஆவணங்களைப் பாதுகாத்துக் காட்சிப்படுத்துவதற்காக டாக்டர் அம்பேத்கர் தேசிய நினைவகம் (டிஏஎன்எம்) ஏற்படுத்தப்பட்டுள்ளது.
டிஏஎன்எம் அருங்காட்சியகத்தில் தனிப்பட்ட உடைமைகள், புகைப்படங்கள், கடிதங்கள், டாக்டர் அம்பேத்கரின் வாழ்க்கை தொடர்பான ஆவணங்கள், அவரது கல்வி, சமூக சீர்திருத்த இயக்கங்கள், அரசியல் வாழ்க்கை உள்ளிட்டவை தொடர்பான ஆவணங்கள் உள்ளன. அவரது உரைகள், நேர்காணல்களை வெளிப்படுத்த ஒலி-ஒளி கண்காட்சிகளும் இங்கு இடம்பெற்றுள்ளன.