காங்கிரஸ் கட்சிக்குச் சொந்தமான நேஷனல் ஹெரால்டு பத்திரிக்கைக்கு சொந்தமான ரூ.2000 கோடி சொத்துகளை சட்டவிரோதமாக சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் வாங்கியதாக பா.ஜ.க தலைவர்களில் ஒருவரான சுப்ரமணிய சுவாமி கோர்ட்டில் 2012-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார்.
நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை அசோசியேடெட் ஜர்னல் லிமிடெட் நிறுவனம் நடத்தி வந்தது. அந்நிறுவனத்திற்கு 2000 கோடி ரூபாய் அளவுக்கு சொத்து இருந்தது. அந்த சொத்துகளை காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் 2010-ம் ஆண்டு சட்டவிரோதமாக யங் இந்தியன் லிமிடெட் நிறுவனத்தின் பெயருக்கு மாற்றிக்கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
ஆனால் இது குறித்து விசாரணை நடத்த சுப்ரீம் கோர்ட் ஒப்புதல் வழங்கியது. இதையடுத்து 2021-ம் ஆண்டு இது குறித்து அமலாக்கப்பிரிவு விசாரணை நடத்ததொடங்கியது.
யங் இந்தியன் நிறுவனத்தில் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு தலா 38 சதவீத பங்குகள் இருக்கிறது. வெறும் ரூ.50 லட்சத்தை மட்டும் கொடுத்து அசோசியேடெட் நிறுவனத்தின் ரூ.2000 கோடி சொத்துகளை யங் இந்தியன் நிறுவனம் வாங்கிக்கொண்டதாக கூறி சுப்ரமணிய சுவாமி டெல்லி கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
2023-ம் ஆண்டு நவம்பர் மாதம் மும்பை, டெல்லி, லக்னோவில் உள்ள அசோசியேடெட் ஜர்னல் நிறுவனத்திற்கு சொந்தமான ரூ.661 கோடி சொத்துகளையும், ரூ.91.2 கோடி பங்குகளையும் அமலாக்கப்பிரிவு பறிமுதல் செய்வதாக அறிவித்தது.
தற்போது அந்த சொத்துக்களை தன் வசம் எடுக்கும் வேலையில் அமலாக்கப்பிரிவு ஈடுபட்டுள்ளது.

டெல்லியில் உள்ள ஹெரால்டு ஹவுஸ், மும்பை, லக்னோவில் உள்ள சொத்துகள் இருக்கும் பகுதியில் இது தொடர்பாக அமலாக்கப்பிரிவு நோட்டீஸ்களை ஒட்டி இருக்கிறது. அந்த இடங்களை காலி செய்யவேண்டும் என்றும் அமலாக்கப்பிரிவு அதில் குறிப்பிட்டுள்ளது.
மும்பையில் உள்ள கட்டிடத்தில் ஜிந்தால் சவுத் வெஸ்ட் பிராஜெக்ட் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அந்நிறுவனத்திடம் இனி வாடகையை அமலாக்கப்பிரிவுக்கு நேரடியாக செலுத்தும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இது சோனியா காந்தி குடும்பத்திற்கு மிகப்பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது.
அசோசியேடெட் நிறுவனத்தை 1937-ம் ஆண்டு ஜவஹர்லால் நேரு 5000 சுதந்திர போராட்ட தியாகிகளின் துணையோடு தொடங்கினார். அதில் உள்ள பங்குகளை ஜவஹர்லால் நேரு அனைவருக்கும் பிரித்துக்கொடுத்தார். அந்நிறுவனம் செய்தித்தாள் வெளியிட மட்டும் பயன்படுத்தப்பட்டு வந்தது.
அதனை ஜவஹர்லால் நேரு தொடங்கினாலும் ஒரு போதும் அந்த சொத்தை தனது சொந்த நிறுவனமாக கருதியது கிடையாது. அந்த சொத்து யாருக்கும் தனிப்பட்டது கிடையாது. 2010ம் ஆண்டு இந்நிறுவனத்தில் 1057 பங்குதாரர்கள் இருந்தனர்.

2008-ம் ஆண்டு வரை இந்நிறுவனம் இந்தி, ஆங்கிலம், உருது மொழிகளில் பத்திரிகை வெளியிட்டு வந்தது. இதனால் அந்நிறுவனத்திற்கு டெல்லி, லக்னோ, போபால், மும்பை, இந்தூர், பாட்னா, பஞ்ச்குலா போன்ற பகுதியில் சொத்துகள் இருக்கிறது. அசோசியேடெட் நிறுவனத்தில் பங்குதாரர்களாக இருக்கும் பலரும் இறந்துவிட்டனர்.
அவர்களின் வாரிசுகள் தங்களது பங்குகளை சட்டவிரோதமாக யங் இந்தியன் லிமிடெட் பெயருக்கு மாற்றிவிட்டதாகவும், கம்பெனியின் செயற்குழு கூடியபோது ஒரு முறை கூட தங்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளனர்.
யங் இந்தியன் நிறுவனம் 2010-ம் ஆண்டுதான் தொடங்கப்பட்டது. இதில் சோனியா காந்திக்கும், ராகுல் காந்திக்கும் சேர்த்து 76 சதவீத பங்குகளும், மற்ற பங்கு இதர காங்கிரஸ் தலைவர்களுக்கும் இருந்தது. ஹெரால்டு வழக்கில் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பபட்டுள்ளது.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
