மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க உச்ச நீதிமன்றம் காலக்கெடு நிர்ணயிப்பது வரம்பு மீறிய செயல் என கேரள ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் குற்றம்சாட்டி உள்ளார்.
தமிழக அரசின் சில மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டதை எதிர்த்தும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலவரம்பு நிர்ணயம் செய்யக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், தமிழக ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்ததுடன் கிடப்பில் இருந்த 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்தது. அத்துடன், மாநில ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் குறித்து 3 மாதங்களுக்குள் முடிவு எடுக்க வேண்டும் என தீர்ப்பளித்துள்ளது.
இதுகுறித்து கேரள ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் கூறியதாவது: மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிப்பது தொடர்பாக அரசியல் சாசனத்தில் காலவரம்பு நிர்ணயம் செய்யப்படவில்லை. எனவே, மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்குவதற்கான காலவரம்பை நிர்ணயிக்க அரசியல் சாசன திருத்தம் செய்ய வேண்டும். இதற்கு நாடாளுமன்றத்தில் 3-ல் 2 பங்கு உறுப்பினர்களின் ஆதரவு தேவை.
இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் 2 நீதிபதிகள் இணைந்து மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்குவதற்கான காலவரம்பை நிர்ணயம் செய்துள்ளனர். இதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. இது வரம்பு மீறிய செயல் ஆகும்.
இது தொடர்பாக நீதிபதிகள் மத்திய அரசுக்கு தங்கள் பரிந்துரையை வழங்கி இருக்கலாம். அல்லது கூடுதல் நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு இந்த வழக்கை மாற்றி இருக்கலாம். எல்லா முடிவுகளைம் நீதிமன்றங்களே எடுக்கும் என்றால் நாடாளுமன்றம் எதற்கு?
ஆளுநர்கள் மசோதாக்களை நீண்டகாலத்துக்கு ஒப்புதல் அளிக்காமல் வைத்திருக்க முடியாது என உச்ச நீதிமன்றம் கூறியதை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் ஏராளமான வழக்குகள் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளன. அதற்கு காரணம் இருக்கக்கூடும். இதுபோல்தான் ஆளுநர்கள் மசோதாக்களை நிலுவையில் வைத்திருப்பதற்கும் சில காரணங்கள் இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.