புதுடெல்லி,
மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தஹாவூர் ராணா அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தி இந்தியா கொண்டு வரப்பட்டார். பின்னர் என்.ஐ.ஏ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட அவர் டெல்லி சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு 18 நாள் என்.ஐ.ஏ. காவல் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி டெல்லியில் உள்ள என்.ஐ.ஏ. தலைமை அலுவலகத்தில் அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
இதில் 2-வது நாளாக நேற்றும் அவரிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். அதன்படி மும்பை தாக்குதலில் அவரது துல்லியமான பங்கு குறித்து அவரிடம் பல்வேறு கேள்விகளை கேட்டனர். 3-வது நாளாக இன்றும் பல்வேறு ஆதாரங்களை வைத்து ராணாவிடம் விசாரணை நடத்த என்.ஐ.ஏ திட்டமிட்டுள்ளது.
மேலும் அவருக்கும் மற்றொரு முக்கிய குற்றவாளி ஹெட்லிக்கும் இடையேயான தொலைபேசி உரையாடலின் அடிப்படையிலும் விசாரணை நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். அத்துடன் குறிப்பாக துபாயில் அவர் சந்தித்த நபர் உள்ளிட்ட தொடர்புகள் குறித்தும் விரிவாக விசாரிக்கப்படும் என என்.ஐ.ஏ. வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.