புதுடெல்லி: பிஹார் மாநிலம் பெகுசராய் பகுதியில் செய்தியாளர்களை நேற்று சந்தித்த அமைச்சர் கிரிராஜ் சிங் கூறியதாவது: மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத்தில் நடைபெற்ற வன்முறை துரதிருஷ்டவசமானது. அனைத்து சமூகத்தினரின் பாதுகாப்பும் முதல்வர் மம்தா பானர்ஜியின் கையில் இருக்கிறது. இந்துக்களின் பாதுகாப்பு முஸ்லிம்களுடன் சேர்ந்து மம்தாவுடைய பொறுப்பாகும். முர்ஷிதாபாத்தில் நடைபெற்ற வன்முறை, இந்துக்கள் மேற்கு வங்கத்தை விட்டு வெளியேற கட்டாயப்படுத்துவதை காட்டுகிறது. இதுபோன்ற சட்டவிரோத சம்பவங்கள் எல்லாம் மாநில அரசின் கண்ணெதிரில் நடைபெறுகின்றன. இவ்வாறு அமைச்சர் கிரிராஜ் சிங் கூறினார்.
பாஜக எம்.பி. பிரவீன் கந்தேல்வால் கூறும்போது, ‘‘மாநிலத்தில் அமைதியை நிலைநாட்டுவதில் திரிணமூல் காங்கிரஸ் அரசு தோல்வி அடைந்துவிட்டது. மேற்குவங்கத்தில் வன்முறையை தடுக்க மாநில அரசு தவறிவிட்டது. சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. மம்தா அரசு அமைதியாக இருப்பதைப் பார்த்தால் வன்முறையை ஊக்குவிக்கிறதா என்ற கேள்வி எழுகிறது’’ என்று கண்டனம் தெரிவித்தார்.