சிங்கப்பூர்,
சிங்கப்பூரில் வீடுகளுடன் கூடிய வர்த்தக கட்டிடங்கள் பல அமைந்துள்ளன. இந்நிலையில், இதுபோன்ற கட்டிடம் ஒன்றில் அமைந்த பள்ளியில் கடந்த 8-ந்தேதி திடீரென தீப்பற்றி கொண்டது. இந்த பள்ளியிலேயே ஆந்திர பிரதேச துணை முதல்-மந்திரியான, நடிகர் பவன் கல்யாணின் மகன் மார்க் சங்கர் பவனோவிச் (வயது 8) படித்து வருகிறார்.
சமையல் கலையை கற்று தரும் அந்த பள்ளியில் திடீரென தீப்பிடித்து கொண்டதும் குழந்தைகள் பயத்தில் அலறினர். இந்நிலையில், பாதுகாப்பு கவசம், ஆடை உள்ளிட்ட எதுவுமின்றி அவர்களை இந்தியர்கள் 4 பேர் உடனடியாக செயல்பட்டு மீட்டு, பாதுகாத்துள்ளனர். இந்தர்ஜித் சிங், சுப்ரமணியன் சரண்ராஜ், நாகராஜன் அன்பரசன் மற்றும் சிவசாமி விஜயராஜ் ஆகிய அந்த 4 பேரில் சரண்ராஜ் (வயது 34) தமிழ்நாட்டை சேர்ந்தவர்.
அவர் சம்பவம் பற்றி அளித்த பரபரப்பு பேட்டியில், ஆசிரியர் மற்றும் குழந்தைகள், புகைக்கு நடுவே, ஜன்னலுக்கு வெளியே பார்த்தபடியும், உதவி கோரியும் கத்தியபடி இருந்தனர்.
நான் உடனடியாக லாரியில் இருந்து கீழே குதித்தேன். புகை பெரிய அளவில் வெளிவந்து கொண்டிருந்தது. போதிய நேரமும் இல்லை. எங்களுக்கும் குழந்தைகள் உள்ளன. எங்களுடைய குழந்தைகள் என்றால், நாங்கள் எதுவும் செய்யாமல் நின்று கொண்டு இருந்திருப்போமா? என கேட்ட அவர், மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளார்.
அவர் கூறிய விசயங்களையே மீட்பு பணியில் ஈடுபட்ட மற்றொரு இந்தியரான அன்பரசனும் (வயது 37) கூறினார். அழுது கொண்டிருந்த குழந்தைகளை பார்த்ததும், எங்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை என அவர்கள் தெரிவித்தனர்.
கட்டிட புதுப்பித்தல் வேலைக்காக சில தொழிலாளர்களை இறக்கி விட்டு, விட்டு சரண்ராஜ் லாரியில் திரும்பி கொண்டிருந்தபோது, இந்த சம்பவம் நடந்துள்ளது. அப்போது, இந்த பள்ளி தீப்பற்றி எரிந்து கொண்டிருந்துள்ளது. குழந்தைகள் இருமியபடியும், சுவாசிக்க போராடியபடியும் காணப்பட்டனர்.
சரண்ராஜ் உள்ளிட்ட 4 பேரும் தங்களுடைய சொந்த பாதுகாப்பை விடுத்து, மீட்பு பணிக்கு முன்னுரிமை கொடுத்தனர். உடனடியாக கட்டிடத்தின் சாரம் மற்றும் ஏணியை பயன்படுத்தி, மேலே ஏறி சென்று குழந்தைகளை மீட்டனர். அவர்கள், தக்க சமயத்தில் சமயோசிதத்துடன் சிந்தித்து, துணிச்சலாக செயல்பட்டு, குழந்தைகள் உள்ளிட்ட பலரையும் பாதுகாத்ததற்காக சிங்கப்பூர் அரசு அவர்களுக்கு சான்றிதழ் அளித்து கவுரவம் வழங்கியுள்ளது.
ஆட்கள் திறனுக்கான அமைச்சகத்தின் நாணயங்களும் அவர்களுக்கு வழங்கப்பட்டன. தீ விபத்தில் சிக்கிய 22 பேரில் 16 பேர், 6 முதல் 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் ஆவர். மற்ற அனைவரும் 23 முதல் 55 வயதுக்கு உட்பட்டவர்கள். இந்த சம்பவத்தில், தீப்பாதுகாப்பு விதிகள் மீறப்பட்டு இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. விதிகளை மீறியவர்கள் கண்டறியப்பட்டால், 2 லட்சம் சிங்கப்பூர் டாலர் வரை அபராதம் விதிக்க வாய்ப்பு உள்ளது.