வெளிநாட்டினர் உடனடியாக பதிவு செய்ய வேண்டும்: அமெரிக்க அரசின் உத்தரவும் பின்புலமும்!

அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாட்டினர் உடனடியாக தங்கள் விவரங்களை பதிவு செய்ய வேண்டும். இல்லையெனில் அவர்கள் அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்படுவார்கள் என்று அந்த நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்காவில் ‘அந்நியர் பதிவு சட்டம் 1940’ அமலில் உள்ளது. இந்த சட்டத்தின்படி 14 வயதுக்கு மேற்பட்ட வெளிநாட்டினர் 30 நாட்களுக்கு மேல் அமெரிக்காவில் தங்கியிருந்தால் அவர்கள் முறைப்படி பதிவு செய்ய வேண்டும்.

மிக நீண்ட காலமாக ‘அந்நியர் பதிவு சட்டம்’ கண்டிப்புடன் அமல்படுத்தப்படவில்லை. தற்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்ப், இந்த சட்டத்தில் கடுமையான விதிகளை சேர்த்து பல்வேறு திருத்தங்களை செய்துள்ளார். புதிய திருத்த சட்டம் கடந்த 11-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்க அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் செய்தியாளர்களிடம் கூறும்போது, “அமெரிக்காவில் 30 நாட்களுக்கு மேல் தங்கியுள்ள வெளிநாட்டினர் அனைவரும் உடனடியாக தங்கள் விவரங்களை உள்துறை பாதுகாப்பு (டிஎச்எஸ்) அரசு அலுவலகங்களில் பதிவு செய்ய வேண்டும். இல்லையெனில் அவர்கள் கைது செய்யப்படுவர். சிறை தண்டனை விதிக்கப்படும். அபராதம் விதிக்கப்படும். மீண்டும் அமெரிக்கா வருவதற்கு நிரந்தர தடை விதிக்கப்படும்” என்று தெரிவித்தார்.

இதுகுறித்து அமெரிக்காவில் வாழும் இந்திய வம்சாவளியினர் கூறியதாவது: அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய வெளிநாட்டினரை நாடு கடத்த அதிபர் டொனால்டு ட்ரம்ப் அதிதீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதேபோல அமெரிக்காவில் கிரீன் கார்டு பெற்று வாழும் வெளிநாட்டினர் மீதான கெடுபிடிகளும் அதிகரித்து உள்ளன.

மிக நீண்ட காலமாக ‘அந்நியர் பதிவு சட்டம்’ கிடப்பில் போடப்பட்டு இருந்தது. தற்போது அந்த சட்டத்தில் கடுமையான விதிகளை சேர்த்து அமல்படுத்தி உள்ளனர். இதன்படி எச்-1பி விசா, மாணவர் விசா வைத்திருப்போர் மற்றும் கிரீன் கார்டு வைத்திருப்போர் 24 மணி நேரமும் தங்களது ஆவணங்களை கையில் வைத்திருக்க வேண்டும். மேலும் அவர்களின் பிள்ளைகள் 14 வயதை எட்டிய உடன் சம்பந்தப்பட்ட அரசு அலுவலகங்களில் பயோமெட்ரிக் விவரங்களை பதிவு செய்ய வேண்டும். இதற்கு பெற்றோரே பொறுப்பு என்று அரசு தரப்பு தெரிவித்திருக்கிறது.

அதாவது 14 வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகளின் விவரங்களை பதிவு செய்யவில்லை என்றால் சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும். அதிகபட்சமாக ரூ.4.30 லட்சம் அபராதம் செலுத்த நேரிடும். 6 மாதங்கள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம். அதிபர் டொனால்டு ட்ரம்பின் நடவடிக்கைகளால் இந்திய சமூகத்தினர் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவ்வாறு அமெரிக்கவாழ் இந்திய வம்சாவளியினர் தெரிவித்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.