வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸ் வழியாக பக்தர்கள் காலணி அணிந்து சென்றுள்ளதால், பாதுகாப்பை திருமலையின் கேள்விக்குறியாக்கி உள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளதன் விளைவாக திருமலையில் ஏற்கனவே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
ஆயுதம் தாங்கிய ஆக்டோபஸ் கமாண்டோ குழுவினர் 24 மணி நேரமும் திருமலையை கண்காணித்து வருகின்றனர்.
மேலும் ஆயுதப்படை போலீஸார், சாதாரண சட்டம்-ஒழுங்கு போலீஸார், தேவஸ்தானத்தின் கண்காணிப்பு பிரிவினர் என மலையடிவாரத்தில் இருந்து கோயில் வரையிலும் மட்டுமின்றி பக்தர்கள் கூடும் முக்கிய இடங்களில் எல்லாம் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது தவிர, அலிபிரி, ஸ்ரீவாரி மெட்டு மார்க்கங்களில் வாகனங்கள், பக்தர்கள் தீவிர சோதனைக்கு பிறகே திருமலைக்கு அனுமதிக்கப்படுகின்றனர். திருப்பதி மலையடிவாரம், திருமலை வேற்று மத பிரச்சாரம் உட்பட அன்னிய மத சின்னங்கள், கட்சிக் கொடிகள், ஆர்ப்பாட்டங்கள், தர்ணா போன்ற எதுவும் நடத்த தடையும் விதிக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில் உட்பட பான் மசாலா, குட்கா, பீடி, சிகரெட், மதுபான பாட்டில்கள், மாமிசம் என எதையும் திருமலைக்கு கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், கத்தி, துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை கூட திருமலைக்கு கொண்டு செல்ல முடியாது.
மேலும், ஏழுமலையானை தரிசிக்க கோயிலுக்குள் செல்ல வேண்டுமெனில் மேலும் பல சோதனைகளை கடந்த பிறகே கருவறை வரை நாம் செல்ல முடியும். செல்போன்கள், ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள், கால்குலேட்டர்கள், கேமராக்கள் என எதையும் உடன் கொண்டு செல்ல முடியாது. அதனை ஆரம்பத்திலேயே சோதனையிட்டு தனி அறையில் வைக்கப்பட்டு விடும்.
தரிசனம் முடிந்த பின்னர், அவற்றை சம்பந்தப்பட்ட பக்தர்கள் மீண்டும் பெற்று கொள்ளலாம். ஆனால், கோயிலுக்குள் செல்வோர் கண்டிப்பாக காலணி அணிந்து செல்ல மாட்டார்கள். ஒருவேளை குழந்தைகள் தெரியாமல் அணிந்து வந்தால் கூட அவற்றை தொடக்கத்திலேயே கழற்றி ஓரமாக எறிந்து விடுவார்கள். இந்நிலையில், நேற்று வட மாநிலத்தை சேர்ந்த 2 பக்தர்கள் வெள்ளை நிற காலணியை அணிந்து கொண்டு, வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸ் வழியாக அனைத்து சோதனைகளையும் எதிர்கொண்டு, பின்னர் அதே வழியாக கோயிலின் முகப்பு கோபுரம் வரை வந்து விட்டனர். அங்கு இவர்களின் காலை பார்த்த பாதுகாப்பு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். எப்படி நீங்கள் காலணி அணிந்து கோயிலுக்கு வரலாம்? யார் உங்களை உள்ளே விட்டது? என சரமாரியாக கேள்விகளை கேட்டு அவர்களின் காலணிகளை கழற்றி கோயிலுக்கு வெளியே வீசினர். இது எங்களுக்கு தெரியாது என அந்த பக்தர்கள் ஒருவாறு சமாளித்து விட்டு தரிசனத்துக்கு சென்று விட்டனர்.
ஆனால், இவர்கள் இருவரும் இவ்வளவு சோதனைகளுக்கு பிறகு காலில் காலணி அணிந்தவாறு எப்படி கோயில் முகப்பு வாசல் வரை வந்தனர் ? என்பது அதிகாரிகளுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. பக்தர்களை சோதனையிடுவதில் இவ்வளவு அலட்சியமா? என பக்தர்களும், இந்து அமைப்பினரும் கேள்வி எழுப்பி உள்ளனர். இது அலட்சியமா ? கவனக்குறைவா ? யாருடைய தவறு இது என்று கண்டறிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் ஏழுமலையானின் கோயில் பாதுகாப்பே ஒரு கேள்விக்குறியாகி விட்டது என பல விமர்சனங்களும் சமூக வலைதளங்களில் எழுந்து வருகின்றன. இந்த சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சியினரும் தீவிர விமர்சனம் செய்து வருகின்றனர்.