பெங்களூரு,
கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் முல்பாகல் தாலுகா ஆவணி கிராமத்தை சேர்ந்தவர் எல்லப்பா. விவசாயியான இவர் தனக்கு சொந்தமாக பசுமாடு ஒன்றை வளர்த்து வந்தார். இந்த நிலையில் சினையாக இருந்த அந்த பசுமாடு நேற்று கன்றுக்குட்டி ஒன்றை ஈன்றது.
அந்த கன்றுக்குட்டியை பார்த்து விவசாயி எல்லப்பா ஆச்சரியம் அடைந்தார். அதாவது அந்த கன்றுக்குட்டி 2 தலைகள், 4 கண்களுடன் இருந்தது. இதுபற்றி அவர் உடனடியாக கால்நடை டாக்டருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் கால்நடை டாக்டர், அங்கு வந்து பார்வையிட்டார்.
மேலும் கன்றுக்குட்டியை அவர் பரிசோதனை செய்தார். அப்போது கன்றுக்குட்டி நல்ல வளர்ச்சியுடன் ஆரோக்கியமாக இருப்பதாக தெரிவித்தார். 2 தலை, 4 கண்களுடன் பிறந்த அதிசய கன்றுக்குட்டியை அந்தப்பகுதியை சேர்ந்த மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.