6 மாவட்டங்களில் புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்கப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகள் இல்லாத காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருபத்தூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

காஞ்சிபுரம் ஒன்றியம் திருப்புட்குழி ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரூ.4.80 கோடி மதிப்பில் கட்டப்பட்ட 9 புதிய கட்டிடங்கள் திறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு ஆட்சியர் கலைச்செல்வி தலைமை தாங்கினார். மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி ஆகியோர் பங்கேற்று புதிய கட்டிடங்களை திறந்து வைத்தனர்.

அப்போது அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியது: காஞ்சிபுரம் மாவட்டத்தில் இதுவரை மொத்தம் ரூ.42.25 கோடி செலவில் பல்வேறு மருத்துவ கட்டிடங்கள் மற்றும் உயர் மருத்துவ உபகரணங்கள் தொடங்கி வைக்கப்பட்டன. இதில், ரூ.1.50 கோடி செலவில் 6 நகர்ப்புற நலவாழ்வு மைய கட்டிடங்கள், ரூ.2 கோடி செலவில் 8 துணை சுகாதார நிலைய கட்டிடங்கள், ரூ.2.75 கோடி செலவில் 7 ஆரம்ப சுகாதார நிலையங்களில் புறநோயாளிகள் பிரிவு, செவிலியர் குடியிருப்பு, கூடுதல் கட்டிடங்கள் உட்பட பல்வேறு மருத்துவ சேவைகள் திறந்து வைக்கப்பட்டு மக்கள் பயன் பெற்று வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரூ.4.80 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 9 மருத்துவமனை கட்டிடங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. மேலும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரூ.299.88 கோடி செலவில் 29 மருத்துவ கட்டிடங்களுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இவற்றில் ரூ.218.40 கோடி மதிப்பீட்டில் காரப்பேட்டை, அரசு அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனைக்கு மட்டும் தரை மற்றும் 5 தளங்கள் கொண்ட புற்றுநோய்க்கான ஒப்புயர்வு மைய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் மற்றும் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ் மருந்து பெட்டகம் ஆகியவை வழங்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறும்போது, “காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் உட்பட அரசு மருத்துவக் கல்லூரிகள் இல்லாத 6 மாவட்டங்களுக்கு புதிய அரசு மருத்துவக் கல்லூரி தொடங்கப் படும். நாய்க்கடி, பாம்புக்கடி மருந்துகள் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கையிருப்பு வைக்கப்பட்டுள்ளன” என்றார்.

இந்த நிகழ்ச்சியில் ஆட்சியர் கலைச்செல்வி, காஞ்சிபுரம் எம்.பி.க.செல்வம், எம்எல்ஏக்கள் க.சுந்தர், சி.வி.எம்.பி. எழிலரசன், மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் படப்பை ஆ.மனோகரன், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் எம்.மகாலட்சுமி உட்பட பலர் பங்கேற்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.