ஐபிஎல் வரலாற்றில், நேற்று (ஏப்ரல் 12) நடைபெற்ற ஹைதராபாத் vs பஞ்சாப் போட்டி முக்கியமான போட்டியாக அமைந்தது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 245 ரன்கள் குவித்தது. அடுத்து களமிறங்கிய ஹைதராபாத் அணி வெறும் 2 விக்கெட்டுகளை இழந்து 18.3 ஓவர்களிலேயே 247 ரன்கள் அடித்து வெற்றிபெற்றது. ஹைதராபாத்தின் இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் அபிஷேக் சர்மாதான்.

முதல் ஐந்து போட்டிகளில் 51 ரன்கள் மட்டுமே குவித்த அபிஷேக் சர்மா, இந்தப் போட்டியில் ஆட்டத்தில் தனியாளாக 55 பந்துகளில் 14 பவுண்டரிகள், 10 சிக்ஸர்கள் என அதிரடியாக 141 ரன்கள் குவித்து 17-வது ஓவரில் அவுட்டானார். இதன் மூலம், ஐ.பி.எல்-லில் ஒரு போட்டியில் தனிநபர் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் கெயில், மெக்கல்லம் ஆகியோருக்கு அடுத்த இடத்தைப் பிடித்தார் அபிஷேக். மேலும், இதில் இந்தியர்கள் வரிசையில் முதலிடத்தில் இருந்த கே.எல்.ராகுலை (132 ரன்கள்) இரண்டாமிடத்துக்குத் தள்ளி முதலிடத்துக்கு முன்னேறினார்.
இப்போட்டியில் ஆட்ட நாயகன் விருது வென்ற பிறகு பேசிய அபிஷேக் சர்மா, “இது எனக்கு மிகவும் ஸ்பெஷலானது. என்னுடைய 14 வயது முதல் நான் விளையாடும் போட்டிகளை என் அப்பா பார்க்க வருகிறார். இன்றும், இன்னிங்ஸ்களுக்கு நடுவே அவரின் முகத்தைப் பார்த்தால், அந்த ஷாட் ஆடு, இந்த ஷாட் ஆடு என்று எனக்கு சிக்னல் கொடுப்பதை நீங்கள் பார்க்கலாம். அவர்தான் என்னுடைய முதல் கோச்.

என் தாய், தந்தை முன்னிலையில் இதைச் செய்தது எனக்கு மிகவும் ஸ்பெஷல். இதுதான் என்னுடைய அதிகபட்ச ஐபிஎல் ஸ்கோர் என்று நினைக்கிறேன். போட்டியை முடித்துக் கொடுக்குமாறு என் தந்தை தொடர்ந்து கூறுவார். அந்த வகையில் இப்போது அவர் இன்னும் திருப்தியடையவில்லை. முன்னேறுவதற்கு எப்போதும் இடமிருக்கிறது. தொடர்ந்து நான் கடினமாக உழைப்பேன்” என்று கூறினார்.
மறுபக்கம், அபிஷேக்கின் தந்தை ராஜ் குமார் ஷர்மா, “நான் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்பதை என்னால் வெளிப்படுத்த முடியாது. மோசமான கட்டத்தை நினைத்து கவலைப்பட வேண்டாம், இது எல்லா வீரருக்கும் நடக்கும் என்று அவரை நான் ஊக்கப்படுத்தினேன். இரண்டாவது போட்டியில் ரன் அவுட்டானார். மற்ற போட்டிகளில் ஷாட்கள் பவுண்டரிக்கு செல்லவில்லை.

ஆனால், இப்போது அவர் தனது நம்பிக்கையை மீட்டெடுத்துவிட்டர். அவர் அணிக்காக வென்றுவிட்டார். வரும் நாள்களில் அவர் சிறப்பாக செயல்படுவார். போட்டிக்கு முன்பு காலையில், நான் இன்று பெரிய ஸ்கோர் அடிக்கப்போவதாகவும், அணியின் வெற்றிக்கு உதவப்போவதாகவும் கூறினார்” என்று தெரிவித்தார்.