Chennai Super Kings: ஐபிஎல் 18 வது சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு மிகவும் சொதப்பலாகவே அமைந்துள்ளது. ஏலத்தில் நல்ல வீரர்களை எடுத்திருந்த போதிலும் அவர்கள் தொடர்ந்து ரன்கள் அடிக்க மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக இதுவரை விளையாடிய 6 போட்டிகளில் ஐந்தில் தோல்வியை சந்தித்துள்ளனர். இந்த சீசனின் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக மட்டுமே இதுவரை வெற்றியை பெற்றுள்ளது. ஐபிஎல் வரலாற்றிலேயே இந்த முறை தான் தொடர்ந்து 5 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
கேப்டன் நீக்கம்
சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் காயம் காரணமாக இந்த சீசனில் இருந்து விலகி உள்ளார்.கையில் லேசான எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த சீசனில் மீதமுள்ள போட்டிகளுக்கு தோனி கேப்டனாக தொடர்வார் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் அறிவித்தது. இருப்பினும் தோனியின் கேப்டன்சியின் கீழ் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக சென்னை மைதானத்தில் சிஎஸ்கே மோசமான தோல்வியை சந்தித்தது. 20 ஓவர்களில் 103 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. இதனால் சென்னையின் ரசிகர்கள் மிகுந்த வருத்தத்தில் இருந்தனர்.
மற்ற அணிகளுக்கு எதிரான தோல்வியை விட கொல்கத்தா அணிக்கு எதிரான தோல்வி மிகவும் மோசமாக இருந்தது. இதனால் அணியில் தொடர்ந்து ரன்கள் நடிக்க சிரமப்பட்டு வரும் வீரர்களை வெளியேற்ற உள்ளதாக தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. முதல் சில போட்டிகளில் கான்வே விளையாடாத நிலையில் அவரை அணிக்குள் கொண்டு வந்தனர். ஆனால் அவரும் பெரிதாக ரன்கள் அடிக்க வில்லை. மிடில் ஆர்டர்களில் விளையாடி வந்த ஷாம் கரன், ஓவர்டன் ஆகியோருக்கும் சமீபத்திய போட்டிகளில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஆனால் தொடர்ந்து ரன்கள் அடிக்க சிரமப்படும் ரச்சின் ரவீந்திரா, ராகுல் திருப்பாதி, அஸ்வின் போன்றவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.
சென்னை அணியில் மாற்றங்கள்
இதுவரை விளையாடிய 6 போட்டிகளில் பெரிதாக பெர்ஃபாமன்ஸ் கொடுக்காத வீரர்களை நீக்க சென்னை அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதன்படி அஸ்வினுக்கு பதிலாக ஸ்ரேயாஸ் கோபாலை விளையாட வைக்கலாம் என்ற முடிவை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் மிடில் ஆர்டரில் தீபக் ஹூடாவிற்கு பதிலாக ஆண்ரே சித்தார்த்தை களம் இறக்க தயாராகியுள்ளனர். மேலும் விஜய் சங்கர் மற்றும் ரச்சின் ரவீந்தராவிற்கு பதிலாக ஷாம் கரன் அல்லது ஓவர்டன் ஆகிய இருவர்களில் ஒருவரை விளையாட வைக்க வாய்ப்புள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அடுத்ததாக திங்கட்கிழமை லக்னோ அணிக்கு எதிராக விளையாட உள்ளனர்.