டெல்லி கேபில்ஸ் ரசிகர்களுக்கு மும்பை இந்தியன்ஸ் அணி இன்று (ஏப்ரல் 13) எதிர்பாராத தோல்வியைப் பரிசளித்து, டெல்லியின் வெற்றிநடையில் முதல் கல்லை வீசியிருக்கிறது.
டாஸ் வென்ற டெல்லி கேப்டன் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த மும்பை அணிக்கு தொடக்கமே ரோஹித்தின் (18) விக்கெட்டுடன் சறுக்கலாக அமைந்தது.

ஆனாலும், ரிக்கிள்டன் (41), சூர்யகுமார் யாதவ் (40), திலக் வர்மா (59), நமன் திர் (38) ஆகியோரின் அதிரடியால் 20 ஓவர்கள் முடிவில் மும்பை 5 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் குவித்தது.
டெல்லி மைதானத்தில் இதுவரை இரண்டு முறை மட்டுமே 200+ டார்கெட் வெற்றிகரமாக சேஸ் செய்யப்பட்டிருக்கிறது. இதுவே மும்பைக்கு ஒரு பாசிட்டிவாக அமைந்தது.
206 என்ற கடினமான இலக்கை நோக்கிக் களமிறங்கிய டெல்லி அணிக்கு முதல் ஓவரின் முதல் பந்திலேயே ஃபிரேஸர் மெக்கர்க்கை அவுட்டாக்கி அதிர்ச்சி தந்தார் தீபக் சஹார்.
ஆனால், அந்த விக்கெட்டால் 1,077 நாள்களுக்குப் பிறகு ஐ.பி.எல் கிரீஸுக்குள் நுழைந்த கருண் நாயர், அந்த விக்கெட்டை ஏன் எடுத்தோம் என்று மும்பையே யோசிக்குமளவுக்கு மும்பையைக் குடைந்துவிட்டார்.

பும்ரா, போல்ட் என உலகின் சிறந்த பவுலர்களையெல்லாம் பவுண்டரி, சிக்ஸ் என அலட்சியமாக பேட்டால் நோகடித்தார் கருண் நாயர். மறுபக்கம், தேவைக்கேற்ப மட்டும் பெரிய ஷாட்களுக்கு சென்று கருணுக்கு சப்போர்ட் செய்துகொண்டிருந்தார் அபிஷேக் போரல்.
22 பந்துகளில் கருண் நாயர் அரைசதமடித்தார். கருணின் அதிரடியாலும், போரலின் நிதானத்தாலும் இந்த பார்ட்னர்ஷிப் 9 ஓவர்களிலேயே 100 ரன்களைத் தொட்டது.
10 ஓவர்கள் முடிவில் 113 ரன்கள் வர, டெல்லியின் வெற்றிக்கு அடுத்த 10 ஓவர்களில் 92 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. இந்த இடத்தில்தான் ஆட்டத்தின் போக்கையே மாற்றும் முக்கியமான முடிவைய் எடுத்தார் ஹர்திக்.
ரோஹித்திக்குப் பதிலாக கரண் சர்மாவை இம்பேக்ட் பிளேயராக இறக்கி 11-வது ஓவரை வீசுமாறு அவரிடம் பந்தை ஒப்படைத்தார்.

முதல் பந்தையே போரல் சிக்ஸருக்கு அனுப்ப, அடுத்த பந்திலேயே அவரை விக்கெட் எடுத்து மும்பைக்கு நம்பிக்கையளித்தார் கரண்.
டெல்லிக்கு இதுவொரு ஷாக் என்றால், அடுத்த ஓவரில் பவுண்டரி அடித்த அடுத்த பந்திலேயே கருண் நாயரை சான்ட்னர் க்ளீன் போல்டாக்க மும்பையின் நம்பிக்கை மேலும் வலுவாகியது.
என்ன இருந்தாலும் 3 விக்கெட் தானே போயிருக்கு, அக்சரும் ராகுலும் கிரீஸ்ல இருக்காங்க, 50 பாலுக்கு 70 ரன்கள்தான் வேணும் ஈஸியா ஜெயிச்சிடலாம்னு டெல்லி நம்பிக் கொண்டிருந்தது.
அந்த நேரத்தில் யோசிக்க நேரமே கொடுக்காமல், அடுத்த ஓவரிலேயே பும்ராவை இறக்கி அக்சரை 9 ரன்களில் தூக்கியது மும்பை.
சரி லாஸ்ட் மேட்ச் வின்னிங் காம்போ ஸ்டப்ஸும் ராகுலும் இருக்காங்கனு டெல்லி ரசிகர்கள் நம்பிக்கொண்டிருக்க, அதற்கடுத்த ஓவரை மீண்டும் கரண் சர்மாவை வீசவைத்து 1 ரன்னில் ஸ்டப்ஸை விக்கெட் எடுத்தார்கள்.
15-வது ஓவரில் விக்கெட் எதுவும் விடாமல் டெல்லி கொஞ்சம் பெருமூச்சு விட்டது. 15 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் குவித்த டெல்லிக்கு, அடுத்த 30 பந்துகளில் 47 ரன்கள் தேவை.
That’s how you make an
Karn Sharma with two crucial wickets to turn this game into a thriller #DC need 23 from 12 deliveries.
Updates ▶ https://t.co/sp4ar866UD#TATAIPL | #DCvMI | @DelhiCapitals pic.twitter.com/vTnnV5Pdfu
— IndianPremierLeague (@IPL) April 13, 2025
இடைவெளியே கொடுக்காமல் மேட்சை நெறுக்கிக் கொண்டிருந்தது மும்பை. கரண் சர்மா வீசிய 16-வது ஓவரில் மேலும் ஒரு விக்கெட் விழுந்தது. இந்த முறை கரணின் வலையில் ராகுல் என்ற திமிங்கலமே விழுந்தது.
இம்பேக்ட் பிளேயர் கரண், மொத்தமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டத்தின் போக்கையே மாற்றிவிட்டார். இந்த இக்கட்டான நேரத்தில், டெல்லியின் முதல் மேட்ச்சை வெற்றிபெற வைத்த விப்ராஜ், அஷுதோஷ் கைகோர்த்தனர்.
கடைசி 4 ஓவர்களில் டெல்லிக்கு 41 ரன்கள் தேவை. அந்த நேரத்தில் பவர்பிளேயில் மட்டுமல்ல டெத் ஓவர்லயும் நான் ஸ்பெஷலிஸ்ட்னு 17-வது ஓவரை வீசவந்தார் போல்ட்.
6 பந்துகளும் யார்க்கர்தான். ஒரு பவுண்டரி கூட இல்லை. வெறும் 3 ரன்கள் மட்டுமே டெல்லிக்கு கிடைத்தது. என்ன இது ஒன்றரை ஓவரா விக்கெட் வராமல் இருக்கிறதே என 18-வது ஓவரை வீசினார் சான்ட்னர்.
முதல் இரு பந்துகளையும் சிக்ஸ், பவுண்டரியாக்கிய விப்ராஜ், ஐந்தாவது பந்தில் இறங்கி ஆட முற்பட்டு கீப்பரால் ஸ்டம்பிங் ஆகி தனது கேமியோவை முடித்துக்கொண்டார்.

மும்பை பயிற்சியாளர்கள், ரோஹித் சர்மா உள்ளிட்டோர் மேட்ச் நமக்குதான் என்று டக்அவுட்டில் துள்ளிக் குதித்தனர். அந்த முக்கியமான விக்கெட் கிடைத்தாலும், அந்த ஓவரில் 15 ரன்கள் வந்ததாலும், அஷுதோஷ் இன்னும் களத்தில் இருப்பதாலும் மேட்ச் யார் பக்கம் என்பது சஸ்பென்சாகவே இருந்தது.
12 பந்துகளில் டெல்லிக்கு 22 ரன்கள் தேவை. பந்தை பும்ரா கையிலெடுத்தார். 19-வது ஓவரில் முதல் பந்தில் சிங்கிள் எடுக்காமல் நான் பார்த்துக்கொள்கிறேன் டாட் பால் ஆக்கினார் அஷுதோஷ். சொன்னதுபோலவே அஷுதோஷ் அடுத்த இரண்டு பந்துகளையும் பவுண்டரிக்கு அனுப்பி பரப்பரப்பைக் கூட்டினார்.

ஆனால், அடுத்த பந்திலேயே இரண்டாவது ரன் ஓட முயன்று அஷுதோஷ் ரன் அவுட்டாக அங்கேயே மும்பை வெற்றி பெற்றுவிட்டது. அடுத்த இரண்டு பந்துகளில் குல்தீப், மோஹித் சர்மா அவுட்.
12 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை வெற்றி. 19 ஓவர்களில் 193 ரன்களில் டெல்லி ஆல் அவுட். இந்த சீசனில் மும்பை இரண்டாவது வெற்றிறிக்கு இம்பேக்ட் பிளேயராகக் களமிறங்கி அசத்திய கரண் சர்மா ஆட்ட நாயகன் விருது வென்றார்.