‘அதிமுக  உடையக்கூடாது என்ற நிர்பந்தத்தால் பாஜகவுடன்  கூட்டணி’ – திருப்பூர் கூட்டத்தில் கண்கலங்கிய கவுன்சிலர்

திருப்பூர்: அதிமுக என்ற மாபெரும் கட்சி உடையக்கூடாது என்ற நிர்பந்தத்தால் பாஜகவுடன் கூட்டணி அமைத்திருப்பதாக, திருப்பூர் அதிமுக கூட்டத்தில் மாநகராட்சி கவுன்சிலர் ஒருவர் கண் கலங்கி பேசினார்.

திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் திருப்பூர் தெற்கு சட்டப்பேரவை தொகுதி பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் இன்று (ஏப். 14) நடந்தது. மாநகர் மாவட்ட செயலாளரான பொள்ளாச்சி ஜெயராமன் தலைமை வகித்தார். இதில் திருப்பூர் வடக்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ., கே.என்.விஜயகுமார் உட்பட பலர் பேசினார்கள்.

இதில் முன்னாள் எம்.எல்.ஏ, சு.குணசேகரன் பேசியதாவது: அதிமுக பாஜக கூட்டணி அமைந்தது வருத்தமாக இருந்தாலும், இயக்கத்தை காப்பாற்ற வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. கடந்த மக்களவைத் தேர்தலின் போது, இந்த கூட்டணி அமைந்தபோது முஸ்லிம் சகோதரர்கள் வருத்தமடைந்து வேலை செய்யமாட்டோம் என்றார்கள். முடிந்தவரை அதிமுகவுக்காக பணி செய்யுங்கள் என வலியுறுத்தினோம்.

நமக்கு இயக்கம் தான் முக்கியம். பாஜக நிற்கவில்லை. இரட்டை இலைக்கு வாக்களியுங்கள் என்று சொன்னோம். ஆனால் பாஜகவின் கூட்டணியை ஏற்கமாட்டார்கள் என முஸ்லிம்கள் பலர் கூறினர். தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற்று என்ன செய்தது? மத உணர்வுகளை தூண்டிவிட்டு, வாக்குகளை திமுக அறுவடை செய்துகொள்கிறது.” என்று அவர் பேசினார்.

தொடர்ந்து திருப்பூர் மாநகராட்சி 44-வது வார்டு கவுன்சிலர் கண்ணப்பன் பேசும்போது, “அதிமுக என்ற மாபெரும் இயக்கத்தை காப்பாற்ற வேண்டிய நிர்பந்தத்தால், அதிமுக- பாஜக கூட்டணி உருவாகி உள்ளது. இல்லையென்றால், கட்சி 4 மற்றும் 5 ஆக உடையும் சூழலில் தான், கட்சியின் பொதுச் செயலாளர் திடமான கூட்டணியை உருவாக்க முன் வந்துள்ளார். என் உயிர் இருக்கும் வரை முஸ்லிம்களுக்கு துணை நிற்பேன்.

இங்குள்ள மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன், கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமியிடம் பேசி, இங்குள்ள நிலவரத்தை எடுத்துரைக்க வேண்டும். மேலும் “அதிமுக முஸ்லிம்களுக்கு எப்போதும் துணை நிற்கும் என அறிக்கை வெளியிட வேண்டும்” என்றபடி பேசிக்கொண்டிருக்கும் போதே கண் கலங்கினார். தொடர்ந்து அவர் பேசும்போது, “இது என் ஆதங்கம். இதனை சொல்லாவிட்டால், கிளை செயலாளர்கள் பணி செய்யமாட்டார்கள்” என்றார்.

தொடர்ந்து பேசிய மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன், “கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி சொல்லும் கட்சியுடன் கூட்டணி என்பதில் உறுதியாக உள்ளோம். இதில் யாருக்கும் எவ்வித வருத்தமும் இல்லை. முன்னாள் எம்.எல்.ஏ, மற்றும் கவுன்சிலர் ஆகியோர் தங்கள் பகுதியில் முஸ்லிம்கள் அதிகம் என்பதால் கடந்த கால அனுபவங்களை கோடிட்டு காட்டி உள்ளனர்” என்று அவர் பேசினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.