மதுரை: “அதிமுக- பாஜக கூட்டணி குறித்து 15 நாட்களுக்கு பின்பு கருத்து தெரிவிப்பேன்” என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.
மதுரை பெத்தானியாபுரம் பகுதியில் ரூ.72 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணிக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று (ஏப்.14) அடிக்கல் நாட்டினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “மதுரை மேற்கு சட்டபேரவைத் தொகுதிக்கு உட்பட்ட 72 வது வார்டு பகுதியில் ஏற்கனவே அமைக்கப்பட்ட சாலைக்கு அமைச்சர் மூர்த்தி மீண்டும் பூமி பூஜை போட்டுள்ளார். அதிகாரிகள் சொல்லி அமைச்சர் பூமிபூஜை நடத்தியுள்ளார்.
ஏற்கெனவே பூமிபூஜை போட்டதை அதிகாரிகள் அமைச்சரிடம் சொல்லியிருக்க வேண்டும். இப்படித்தான் அதிகாரி சொல்லித்தான் வைகை அணையில் தெர்மாகோல் விட்டேன். இப்போது எல்லோரும் என்னை கிண்டல் செய்கின்றனர். அமைச்சர் மூர்த்தி மேற்கு தொகுதி எம்.எல்.ஏவான என்னிடமும், மக்களிடமும் மாட்டிக்கொண்டுள்ளார்.
இந்தாண்டு அதிமுகவுக்கான ஆண்டு. அதிமுக- பாஜக கட்சிகள் இடையே கூட்டணி முடிவாகியுள்ளது. இந்தக் கூட்டணி குறித்து 15 நாட்களுக்கு பிறகு பதில் சொல்லுவேன். அரசியல் கருத்துக்களை சொல்லும் போது சொல்வேன். நிச்சயமாக அரசியல் பேசுவேன்,” என்று அவர் கூறினார்.