ஜெய்ப்பூர்,
18-வது ஐ.பி.எல். தொடரில் ஜெய்ப்பூரில் இன்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடின. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் படிதார் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் அடித்தது. பெங்களூரு தரப்பில் ஹேசல்வுட், குருனால் பாண்ட்யா, யாஷ் தயாள் மற்றும் புவனேஸ்வர் குமார் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதனையடுத்து 174 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய பெங்களூரு அணி 17.3 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 175 ரன்கள் அடித்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக பில் சால்ட் 65 ரன்களும், விராட் கோலி 62 ரன்களும் அடித்தனர். ராஜஸ்தான் தரப்பில் குமார் கார்த்திகேயா ஒரு விக்கெட் வீழ்த்தினார்.
இந்நிலையில் இந்த வெற்றிக்குப்பின் பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் படிதார் அளித்த பேட்டியில், “இந்த வெற்றி உண்மையிலேயே அற்புதமாக இருக்கிறது. எங்களது பந்து வீச்சாளர்கள் தங்கள் திட்டங்களை செயல்படுத்திய விதம், பார்க்க நன்றாக இருக்கிறது. பவர்பிளேயில் நாங்கள் பந்து வீசிய விதம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த பிட்ச்சில் பேட்டிங் செய்வது எளிதாக இல்லை. எங்களது பந்து வீச்சாளர்களிடமிருந்துதான் எனக்கு நம்பிக்கை கிடைக்கிறது.
அவர்கள் எந்த பிட்சிலும் எந்த சூழ்நிலையிலும் பந்து வீச தயாராக இருக்கிறார்கள். அது அற்புதமானது மற்றும் எனக்கு நிறைய நம்பிக்கையைத் தருகிறது. சால்ட் பற்றி பெவிலியனில் இருந்து பில் சால்ட்டின் பேட்டிங்கை நான் மிகவும் ரசித்தேன். அவர் அதிரடியாக விளையாடிய விதமும் அதே நேரத்தில் விராட் கோலி ஸ்ட்ரைக்கை மாற்றும் விதமும் மிகவும் சிறப்பு வாய்ந்தது. நாங்கள் இதேபோன்று எப்போதும் நேர்மறை மற்றும் நல்ல கிரிக்கெட்டை விளையாட விரும்புகிறோம்” என்று கூறினார்.