திருநெல்வேலி: உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை மத்திய அரசு மதிப்பதில்லை. காவிரி பிரச்சனை, தேர்தல் ஆணையர் நியமனம் போன்ற நிகழ்வுகளை இதற்கு உதாரணமாக கூறலாம். தீர்ப்பையே மதிக்காத அவர்கள் உச்ச நீதிமன்றத்தை இனி என்ன செய்ய காத்திருக்கிறார்களோ தெரியவில்லை என்று தமிழக சட்டப்பேரவை தலைவர் மு.அப்பாவு தெரிவித்தார்.
அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு சமத்துவ நாள் விழா ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் பாளையங்கோட்டை நேருஜி கலையரங்கத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற தமிழக சட்டப் பேரவை தலைவர் அப்பாவு, 1384 பயனாளிகளுக்கு ரூ.9.62 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். முன்னதாக விழாவில் கலந்து கொண்ட அனைவரும் சமத்துவநாள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஆர். சுகுமார், திருநெல்வேலி எம்.பி. ராபர்ட்புரூஸ், பாளையங்கோட்டை எம்.எல்.ஏ. அப்துல்வகாப், மாநகராட்சி மேயர் கோ. ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சிக்குப்பின் செய்தியாளர்களிடம் சட்டப்பேரவை தலைவர் பேசினார். சனாதனத்தை டெங்கு மலேரியாவோடு தொடர்புபடுத்தி பேசுவது கலாச்சார இனப்படுகொலை என தமிழக ஆளுநர் கூறியது குறித்து கேள்விக்கு, சனாதனத்தின் அடிப்படை சாதி ரீதியாக மக்களை பிளவு படுத்துவது. சனாதனமும் இந்திய அரசியல் அமைப்பு சட்டமும் ஒன்றல்ல.
சனாதன தர்மம், ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தை, திராவிட கொள்கையை பின்பற்றுபவர்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். காரணம் பிறப்பின் அடிப்படையில் பிரித்து பார்ப்பதுதான் சனாதனம். அதை எதிர்ப்பது சமூக நீதி, சமத்துவம், இதுதான் இந்திய அரசியல் அமைப்பு சட்டம். இந்தியா மதசார்பற்ற நாடு இல்லை, மதசார்புள்ள நாடு என்று தமிழக ஆளுநர் கூறுகிறார் என்று பதில் அளித்தார்.
ஆளுநருக்கு எதிராக உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு சீராய்வு மனு தாக்கல் செய்ய இருப்பதாக தகவல்கள் வருகின்றன என்ற கேள்விக்கு, தற்போது நாட்டை ஆண்டு வரும் மத்திய அரசு உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஒருபோதும் மதிக்க மாட்டார்கள்.
உதாரணமாக காவிரி பிரச்சினையில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பை அவர்கள் மதிக்கவில்லை. இது அனைவரும் அறிந்ததே. தேர்தல் ஆணையர் நியமன விவகாரத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதியே நீக்கிவிட்டு சட்டத்துறை அமைச்சரை அவருக்கு பதிலாக நியமித்தனர். இதனால் தேர்தல் ஆணையரை நியமிக்கும் குழுவில் பிரதமர், சட்டத்துறை அமைச்சர், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரே இருப்பர்.
இதில் நடுநிலையை எதிர்பார்க்க முடியாது. நடுநிலையோடு இருப்பதை மத்திய அரசு விரும்பவில்லை. அவர்கள் என்ன நினைக்கிறார்களோ அதைத்தான் செயல்படுத்துவார்கள். உச்ச நீதிமன்ற தீர்ப்பையே மதிக்காதவர்கள், உச்ச நீதிமன்றத்தை என்ன செய்ய இருக்கிறார்களோ என்பது தெரியவில்லை என கூறினார்.
மேலும் அவர் கூறும்போது, அமைச்சர் பொன்முடி விவகாரத்தில் தமிழக முதல்வர் உரிய நடவடிக்கை எடுத்துள்ளார். அமைச்சர் கூறியதை யாரும் நியாயப்படுத்தி பேசவில்லை என்று தெரிவித்தார்.