புதுடெல்லி: காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தியின் கணவரும், தொழிலதிபருமான ராபர்ட் வதேரா, அரசியலில் சேர விருப்பம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் ஓர் ஆங்கில ஊடகத்துக்கு அளித்தப் பேட்டியில், “நான் காந்தி குடும்பத்தைச் சேர்ந்தவன் என்பதாலேயே அரசியலுடன் எனக்கு தொடர்பு இருக்கிறது. பல ஆண்டுகளாக ஒவ்வொரு முறையும் தேர்தல் வரும்போதும், சில கட்சிகள் என் பெயரைப் பயன்படுத்தி அரசியல் செய்தனர்.
பிரியங்கா நாடாளுமன்றத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும் என்று நான் எப்போதும் கூறுவேன், இப்போது அவர் மிகவும் கடினமாக உழைக்கிறார். எனது குடும்பத்தினர், குறிப்பாக எனது மனைவி பிரியங்கா மற்றும் மைத்துனர் ராகுல் காந்தி ஆகியோரிடமிருந்து நிறைய கற்றுக்கொள்ள முடிந்தது. அவர்கள் இருவரும் நாடாளுமன்றத்தில் தீவிரமாக பணியாற்றி வருகிறார்கள்.
நான் அரசியலில் சேர வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி முடிவு செய்தால், பிரிவினை சக்திகளை எதிர்த்துப் போராடவும், நாட்டை மதச்சார்பற்ற நிலையில் வைத்திருக்கவும் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்ப வேண்டியதன் அவசியத்தைப் புரிந்துகொண்டு, அந்த நடவடிக்கையை எடுப்பேன். நான் அரசியலில் இருக்க வேண்டும் என்று காங்கிரஸ் கருதினால், எனது குடும்பத்தினரின் ஆசிர்வாதத்துடன் அந்த நடவடிக்கையை மேற்கொள்வேன். களத்தில் என்ன நடக்கிறது, என்ன மாற்றம் தேவை என்பது குறித்து எனக்கு நிறைய புரிதல் உள்ளது என்பது அவர்களுக்குத் தெரியும்.” என்றார்.
மேலும், சமீபத்தில் பெல்ஜியத்தில் தொழிலதிபர் மெகுல் சோக்ஸி கைது செய்யப்பட்டது குறித்தும் வதேரா கருத்து தெரிவித்தார். அதில், “இந்த கைது நடவடிக்கை முக்கியமானது என்றாலும், மோசடி செய்யப்பட்ட பணத்தை மீட்பதிலும், நிதி மோசடியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்குவதை உறுதி செய்வதிலும் கவனம் செலுத்த வேண்டும்.” என்று வலியுறுத்தினார்.