எழுச்சி பெறுமா சென்னை சூப்பர் கிங்ஸ்..? லக்னோ அணியுடன் இன்று மோதல்

லக்னோ,

18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. 5 அணிகளுடன் தலா 2 முறை, மீதமுள்ள 4 அணிகளுடன் ஒரு முறை என ஒவ்வொரு அணியும் மொத்தம் 14 லீக்கில் விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறும்.

இந்த சூழலில் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் லக்னோவில் இன்று (திங்கட்கிழமை) நடைபெறும் 30-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி, முன்னாள் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்சை எதிர்கொள்கிறது. லக்னோ அணி இதுவரை 6 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி (ஐதராபாத், மும்பை, கொல்கத்தா, குஜராத் அணிகளுக்கு எதிராக), 2 தோல்வி (டெல்லி, பஞ்சாப் அணிகளிடம்) கண்டுள்ளது. சொந்த மண்ணில் கடந்த சனிக்கிழமை நடந்த ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்திய கையோடு லக்னோ அணி களம் இறங்குகிறது.

5 முறை சாம்பியனான சென்னை அணி நடப்பு சீசனில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் திணறி வருகிறது. முதல் ஆட்டத்தில் மும்பையை வீழ்த்திய சென்னை அணி அதன் பிறகு தொடர்ச்சியாக 5 ஆட்டங்களில் தோல்வியை சந்தித்துள்ளது. இதன்படி பெங்களூரு, ராஜஸ்தான், டெல்லி, பஞ்சாப், கொல்கத்தா அணிகளிடம் அடுத்தடுத்து தோற்று கடைசி இடத்தில் உள்ளது.

முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த ஆட்டத்துக்கு முன்னதாக கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் போட்டி தொடரில் இருந்து விலகினார். கேப்டன் பொறுப்பை தோனி ஏற்றுள்ளார். இருப்பினும் அந்த ஆட்டத்திலும் சென்னைக்கு ஏமாற்றமே மிஞ்சியது. முந்தைய ஆட்டத்தில் சென்னை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தாவிடம் மோசமான தோல்வியை சந்தித்தது.

சொந்த மண்ணில் நடந்த அந்த ஆட்டத்தில் முதலில் ஆடிய சென்னை அணி 103 ரன்னில் முடங்கியது. ஷிவம் துபே (31 ரன்), விஜய் சங்கர் (29 ரன்) தவிர மற்றவர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். இதனால் அணியில் மாற்றம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை அணி ‘பிளே-ஆப்’ சுற்று வாய்ப்பில் நீடிக்க வேண்டும் என்றால் தங்களது எஞ்சியுள்ள 8 ஆட்டங்களில் 7-ல் வெற்றி பெற வேண்டியது அவசியமானதாகும். இதனால் சென்னை அணி தனது தவறுகளை களைந்து எழுச்சி பெற எல்லா வகையிலும் முயற்சிக்கும்.

அதேநேரத்தில் லக்னோ அணி தங்களது வெற்றி உத்வேகத்தை தொடர வரிந்து கட்டும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது. இவ்விரு அணிகளும் இதுவரை 5 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. இதில் 3 ஆட்டங்களில் லக்னோவும், ஒரு ஆட்டத்தில் சென்னையும் வென்று இருக்கின்றன. ஒரு ஆட்டம் முடிவு இல்லாமல் போனது.

இரு அணிகளின் உத்தேச பட்டியல்:-

லக்னோ: மார்க்ரம், மிட்செல் மார்ஷ் அல்லது ஹிமாத் சிங், நிகோலஸ் பூரன், ரிஷப் பண்ட் (கேப்டன்), ஆயுஷ் பதோனி, டேவிட் மில்லர், அப்துல் சமத், ஷர்துல் தாக்குர், ஆகாஷ் தீப், ரவி பிஷ்னோய், ஆவேஷ் கான், திக்வேஷ் ரதி.

சென்னை: டிவான் கான்வே, ரச்சின் ரவீந்திரா, ராகுல் திரிபாதி, விஜய் சங்கர், ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, டோனி (கேப்டன்), ஆர்.அஸ்வின், அன்ஷூல் கம்போஜ், நூர் அகமது, கலீல் அகமது, பதிரானா.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.