இன்று லக்னோவில் உள்ள ஏகனா கிரிக்கெட் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதுகின்றனர். இந்த போட்டி லக்னோ அணியை விட சென்னை அணிக்கு மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது. ஏனெனில் இன்றைய போட்டியில் சிஎஸ்கே தோல்வி அடையும் பட்சத்தில் ஐபிஎல் 2025ன் ப்ளே ஆஃப் வாய்ப்பை இழக்க நேரிடும். ஏற்கனவே தொடர்ந்து ஐந்து போட்டிகளில் தோல்வி அடைந்துள்ள சென்னை அணி இந்த போட்டியில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் களமிறங்குகிறது. இந்த சீசன் தொடங்கியதில் இருந்து சென்னை அணிக்கு பேட்டிங் மிகவும் மோசமாக இருந்து வருகிறது. குறிப்பாக பவர் பிளேயில் மிகவும் குறைந்த ரன்கள் அடித்த அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் உள்ளது.
மறுபுறம் பவர் பிளேயில் அதிரடி காட்டும் அணியாக லக்னோ உள்ளது. அவர்களது டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களே பாதி வெற்றியை பெற்று தந்து விடுகின்றனர். மார்ஸ், பூரன், மார்க்கரம் போன்ற வீரர்கள் நல்ல பார்மில் உள்ளதால் சென்னை அணியின் பவுலிங் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது. கேப்டன் ருதுராஜ் கைகுவாட் காயம் காரணமாக வெளியேறிய நிலையில், தற்போது தோணி மீண்டும் தலைமை தாங்குகிறார். தோனியின் தலைமையில் கே கே ஆர் அணிக்கு எதிராக மோசமான தோல்வியை சந்தித்த நிலையில் அணியில் பல அதிரடி மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லக்னோ அணிக்கு எதிராக சென்னை அணியின் பிளேயிங் 11 எப்படி இருக்கும் என்று பார்ப்போம்.
It’s the Super Giants the Super Kings! Get.Set.WhistlePodu! #LSGvCSK #WhistlePodu pic.twitter.com/TVkX0dDzaQ
— Chennai Super Kings (@ChennaiIPL) April 14, 2025
சென்னை அணியின் பிளேயிங் 11
ஓப்பனர்களாக டேவான் கான்வே மற்றும் ரச்சின் ரவீந்திரா இந்த ஆண்டு அவ்வளவு சிறப்பாக விளையாடவில்லை என்றாலும் இவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய போட்டியில் இவர்கள் இருவரும் ஓப்பனர்களாக களமிறங்க அதிக வாய்ப்புள்ளது. மூன்றாவது இடத்தில் தொடர்ந்து சொதப்பி வரும் ராகுல் திருப்பாதிக்கு பதிலாக வன்ஷ் பேடி இடம் பெறலாம். டெல்லியை சேர்ந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் வன்ஷ் பேடி இந்த ஆண்டு சென்னை அணியில் இணைந்துள்ளார். அடுத்ததாக சிவம் துபே மற்றும் விஜய் சங்கர் களமிறங்குவார்கள். கடந்த போட்டியில் விஜய் சங்கர் சில அதிரடி ஷாட்களை ஆடினாலும் எதிர்பாராத விதமாக அவுட் ஆகி வெளியேறினார்.
அதன் பிறகு ஆறாவது இடத்தில் ரவீந்திர ஜடேஜா களமிறங்கலாம். லக்னோ மைதானம் ஸ்பின்னர்களுக்கு கை கொடுக்கும் என்பதால் ஜடேஜா நல்ல பெர்ஃபார்ம் பண்ண வாய்ப்புள்ளது. பினிஷர் ரோலில் கேப்டன் எம் எஸ் தோனி களமிறங்குவார். இந்த சீசன் முழுவதும் அஸ்வின் விக்கெட்கள் எடுக்க மிகவும் திணறி வருகிறார். அதே போல பவர் பிளேயில் ரன்களை அதிகமாக விட்டுக் கொடுக்கிறார். இருப்பினும் அவருக்கு இந்த போட்டியில் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பந்துவீச்சாளர்களாக கலீல் அகமது, அன்சுல் கம்போஜ், நூர் அகமது மற்றும் பத்திரனா இடம் பெற அதிக வாய்ப்புள்ளது.