புதுடெல்லி,
ஐ.பி.எல். தொடரில் இன்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. அருண்ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் அக்சர் படேல் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா – ரிக்கல்டன் களமிறங்கினர். நடப்பு சீசனில் தொடர்ந்து சொதப்பி வரும் ரோகித் சர்மா இந்த ஆட்டத்திலாவது அசத்துவாரா? என்று எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. 18 ரன்களில் ஆட்டமிழந்து மீண்டும் ஏமாற்றினார். அடுத்து சூர்யகுமார் யாதவ் களமிறங்கினார்.
மறுமுனையில் அதிரடியாக ஆடி வந்த ரிக்கல்டன் 41 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து ஜோடி சேர்ந்த சூர்யகுமார் யாதவ் – திலக் வர்மா கூட்டணி அதிரடியாக விளையாடி மும்பை அணிக்கு வலு சேர்த்தது. இந்த ஜோடி 60 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் பிரிந்தது. சூர்யகுமார் யாதவ் 40 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 2 ரன்களில் நடையை கட்டினார். பின்னர் களமிறங்கிய நமன் திரும் அதிரடியாக விளையாட மும்பை வலுவான இலக்கை நோக்கி பயணித்தது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய திலக் வர்மா 59 ரன்களில் ஆட்டமிழந்தார்.
பின்னர் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் மும்பை 5 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்கள் அடித்தது. நமன் திர் 38 ரன்களுடனும், வில் ஜாக்ஸ் ஒரு ரன்னுடனும் களத்தில் இருந்தனர். டெல்லி தரப்பில் குல்தீப் யாதவ் மற்றும் விப்ராஜ் நிகாம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதனையடுத்து 206 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற வலுவான இலக்குடன் டெல்லி அணியின் சார்பில் ஜாக் பிரசர் மற்றும் அபிஷேக் போரேல் ஆகியோர் களமிறங்கினர். ஆரம்பமே டெல்லி அணிக்கு அதிர்ச்சியாக அமைந்தது. அந்த அணியின் ஜாக் பிரசர் முதல் பந்திலே கேட்ச் ஆகி வெளியேறினார்.
அடுத்ததாக அபிஷேக் போரலுடன், கருண் நாயர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியில் கருண் நாயர் தனது அதிரடி ஆட்டத்தால் மும்பை அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய அவர் 22 பந்துகளில் தனது அரைசதத்தை பதிவு செய்து அசத்தினார்.

தொடர்ந்து அதிரடி காட்டிய இந்த ஜோடியால், அணியின் ரன்ரேட் வேகமாக உயர்ந்தது. அடுத்ததாக கருண் நாயருடன், கே.எல்.ராகுல் ஜோடி சேர்ந்தார். பின்னர் சதம் அடிப்பார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கருண் நாயர் 89 (40) ரன்களில் போல்ட் ஆகி வெளியேறினார்.
அடுத்து களமிறங்கிய அக்சர் பட்டேல் 9 ரன்னும், ஸ்டப்ஸ் 1 ரன்னும், கே.எல்.ராகுல் 15 ரன்களும், விப்ராஜ் நிகம் 14 ரன்களும், அசுதோஷ் சர்மா 17 ரன்களும், குல்தீப் யாதவ் 1 ரன்னும், மொகித் சர்மா (0) ரன் ஏதும் எடுக்காமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

இறுதியில் டெல்லி அணி 19 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 193 ரன்கள் எடுத்தது. மும்பை அணியின் சார்பில் சிறப்பாக பந்து வீசிய கரண் சர்மா 3 விக்கெட்டுகளும், மிட்செல் சாண்ட்னர் 2 விக்கெட்டுகளும், பும்ரா மற்றும் தீபக் சாஹர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதன்மூலம் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் 12ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி திரில் வெற்றிபெற்றது. இதன்படி மும்பை அணி நடப்பு ஐ.பி.எல் தொடரில் 4 புள்ளிகளுடன் 2-வது தொடர் வெற்றியை பதிவு செய்து, புள்ளிபட்டியலில் 7-வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. டெல்லி அணி புள்ளிபட்டியலில் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டது.