காங். கூட்டணி ஆட்சிக்கு வந்தால் வக்பு வாரிய சட்டத் திருத்தம் ரத்து செய்யப்படும்: ப.சிதம்பரம்

சிவகங்கை: காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் வக்பு வாரிய சட்டத் திருத்தம் ரத்து செய்யப்படும் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.

சிவகங்கை அரண்மனைவாசலில் நேற்றிரவு தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் வக்பு வாரிய சட்டத் திருத்தத்தை கண்டித்து பொதுக்கூட்டம் நடைபெற்றது. முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பேசியதாது: திமுக கூட்டணி கட்சிகள் அனைத்தும் முஸ்லிம்களுக்கு ஆதரவாக உள்ளது. காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் வக்பு வாரிய சட்ட திருத்தத்தை ரத்து செய்வோம். இதனிடையே இச்சட்டம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் முஸ்லிம்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் வாதாடும்.

உச்ச நீதிமன்றம் நீதியின் பக்கம், நியாயத்தின் பக்கம் உறுதியாக தீர்ப்பு அளிக்கும் என நான் நம்புகிறேன். இதனால் முஸ்லிம்கள் தெருக்களில் இறங்கி போராட வேண்டாம். வாக்கு என்ற மிகப் பெரிய ஆயுதம் உள்ளது. அது இருக்கும் வரை உங்களிடம் இருந்து உரிமைகளை யாரும் பறிக்க முடியாது. பறிப்போது போல் தோன்றினாலும் இறுதியில் வாக்கு என்ற ஆயுதம் தான் வெல்லும். இனி வரும் தேர்தல்களில் உங்கள் சமுதாயத்தை, மதக் கோட்பாடுகளை யார் காப்பாற்றுகின்றனர். எதிர்க்கின்றனர் என்பதை தெளிவாக அறிந்து வாக்கு என்ற ஆயுதத்தை பயன்படுத்துங்கள். முஸ்லிம்களுக்கும், இந்துக்களுக்கும் சண்டையே கிடையாது.

ஒருசில அதிதீவிரவாதிகள் முஸ்லிம்களை பகைவர்களாக கருதலாம். ஆனால் நாங்கள் எப்போதும் உங்களை பகைவர்களாக கருத மாட்டோம். எங்களுக்கு நீங்கள் ஆதரவாக இருங்கள், உங்களுக்கு நாங்கள் ஆதரவாக இருப்போம். வக்பு வாரிய சட்டத் திருத்தம் மோசமானது. வன்மையாக கண்டிக்கின்றேன். இது செல்லாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்கும். அச்சட்டத்தில் முஸ்லிம் அல்லாதவர்களும் வாரியத்தில் இருக்கலாம் என கூறப்பட்டுள்ளது. இது முஸ்லிம்களுக்கு எதிராக தொடுக்கப்பட்ட பிரத்யேக தாக்குதல். இந்துக் கோயில்களுக்கு இஸ்லாமியர்களை நியமித்தால் புரட்சியே வெடிக்கும்.

மற்ற நாடுகளில் எந்தவொரு மத வழிபாட்டு தளங்களையும் மற்றொரு மதத்தவர் நிர்வகித்ததாக கூற முடியாது. ஒரு சமுதாயத்தை பழிவாங்க, மிரட்ட வேண்டும் என்பதற்காக கோமாளித்தனமான சட்டத்தை கொண்டு வந்துள்ளனர். ஆனால் நாடே உங்களுக்கு ஆதரவாக இருக்கிறது. இந்தியா இன்னும் ஜனநாயக நாடாக தான் உள்ளது. சில நீதிபதிகள் தவறு செய்தாலும், உச்ச, உயர் நீதிமன்றங்களில் பெருமான்மையின நீதிபதிகள் நேர்மையாக இருக்கின்றனர். அதனால் அரசியல் சாசனபடி, சட்டப்படி தான் தீர்ப்பளிப்பர். இவ்வாறு அவர் பேசினார். அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.