பொறுமையுடன் இலக்கை நோக்கிப் பயணிக்கும் திறமைசாலிக்கள் நீங்கள். உங்கள் ராசிக்கு 9-வது ராசியில் விசுவாவசு தமிழ்ப்புத்தாண்டு பிறக்கிறது. இந்தப் புத்தாண்டில் உங்களுக்கான துல்லியமான 15 பலன்களை விவரிக்கிறார் ஜோதிடரத்னா முனைவர் கே.பி.வித்யாதரன்.
1. மனம் தளராமை, நேர்மறைச் சிந்தனை, கட்டுக்கோப்பான உடல், திட்டமிட்ட செயல்பாடு, தீர்மானமான முடிவு ஆகிய அத்தனையும் கொண்ட ராசிக்காரர் நீங்கள். உங்கள் ராசிக்கு 9-ம் வீட்டில் சந்திரன் இருக்கும்போது இந்தத் தமிழ்ப் புத்தாண்டு பிறக்கிறது. எதிர்ப்புகளைத் தாண்டி முன்னேறுவீர்கள்.
2. இதுவரையிலும் இல்லாத அளவுக்குக் காசு, பணம் தங்கும். சிலர், புது வீடு மாறும் வாய்ப்பு உண்டு. தொழில்மாற்றமும் உண்டு. தடங்கல்கள் விலகும். கோர்ட் வழக்குகள் சாதகமாகும்.

3. இந்த ஆண்டு மே-11 அன்று நிகழும் குருப்பெயர்ச்சிக்குப் பிறகு நல்லதொரு முன்னேற்றம் உண்டு. 5-ம் வீட்டில் நுழைந்து அள்ளிக் கொடுப்பதுடன், வாழ்க்கைக்கு அஸ்திவாரத்தையும் அமைத்துத் தருவார் குருபகவான். உங்களின் அணுகுமுறையை மற்றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றியமைத்துக் கொள்வீர்கள்.
4. குடும்பத்தில் பிரச்னைகள், குழப்பங்கள் யாவும் விலகும். மகிழ்ச்சி தங்கும். பிள்ளை இல்லையே என்று ஏங்கித்தவித்த தம்பதியருக்கு கண்ணுக்கழகான குழந்தை பிறக்கும்.
5. அம்மாவின் ஆரோக்கியம் மேம்படும். அலட்சியப்படுத்திச் சென்ற நண்பர்கள், உறவினர்கள் எல்லாம் வலிய வந்து பேசும் அளவுக்கு முன்னேற்றம் காண்பீர்கள். குடும்பச் சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும்.
6. குரு உங்கள் ராசியை பார்ப்பதால் எதையோ இழந்ததைப்போல் இருந்த உங்கள் முகம் மலரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள்.
7. ஏப்ரல் 26 முதல் ராகு ராசிக்குள்ளேயே வந்து அமர்கிறார். ஆகவே, ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும். தோல் அலர்ஜி, யூரினரி இன்ஃபெக்சன், ஹார்மோன் கோளாறு போன்றவை வந்து போகும். மருத்துவரின் ஆலோசனை யின்படி நடந்து கொள்ளுங்கள்.
8. இடம், பொருள் ஏவல் அறிந்து பேசும் வித்தையை கற்றுக் கொள்வீர்கள். சமயோஜித புத்தியுடனும் நடந்து கொள்வீர்கள்.

9. பண வரவு அதிகரிக்கும். சிலர், வீடு – மனை வாங்கும் யோகம் உண்டு. செலவுகளைக் கட்டுப்படுத்துவீர்கள் என்றாலும், திடீர் செலவுகளால் சற்றுத் தடுமாறுவீர்கள்.
10. கேது 7-ல் வருவதால் குடும்பத்தில் சந்தேகத்தால் பிரச்னை எழலாம். எனினும், மனதிலிருந்து வந்த வீண் பயம் விலகும். பிரச்னைகளை நேருக்குநேராக எதிர்கொள்ளும் ஆற்றல் கிடைக்கும்.
11. பலரையும் நம்பி ஏமாந்த நிலை மாறும். பிரபலங்களின் அறிமுகமும் கிடைக்கும். அவர்களால் சிற்சில தருணங்களில் ஆதாயம் கிடைக்கும். சொத்துப் பிரச்னையை நீதிமன்றம் வரை கொண்டுசெல்ல வேண்டாம்.
12. தொழிலில் போட்டியாளர்களை திகைக்க வைக்கும்படி, உங்களின் அணுகுமுறையை மாற்றுவீர்கள். பழைய வாடிக்கையாளர்கள் மீண்டும் வருவார்கள். அடிக்கடி விடுப்பில் சென்ற வேலையாட்கள் இனி பொறுப்பாக நடந்து கொள்வார்கள்.
13. வியாபாரத்தில், அக்டோபர், நவம்பர் மாதங்களில் புதிய முதலீடுகள் போடுவீர்கள். கணினி, உணவு, எண்டர்பிரைஸ், கமிசன் வகைகளால் ஆதாயமடைவீர்கள். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள்.
14. உத்தியோகத்தில், வேலைச்சுமை குறையும். மேலதிகாரியுடனான பனிப்போர் நீங்கும். கல்வித்தகுதியை உயர்த்திக் கொள்வீர்கள். நீண்டநாளாக எதிர்பார்த்த பதவி உயர்வு தேடி வரும். வருமானம் உயரும்.
15. பெருமாள் வழிபாடு உங்களுக்கு நன்மை பயக்கும். திருவோண நட்சத்திர நாள்களில் அருகிலுள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று 11 நெய்தீபங்கள் ஏற்றி வைத்து வணங்குங்கள். கோள்சாரம் யாவும் நன்மையை அள்ளித் தரும். திண்டிவனம் அருகிலுள்ள (ஆவணிப்பூர் செல்லும் வழியில்) ஆட்சிப்பாக்கத்தில் அருளும் அட்சய வரதரை, வழிபட்டு வாருங்கள்; புகழும் செல்வமும் அட்சயமாய் வளரும்!