கொடுங்கையூர் எரிஉலை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, வரும் மே 25-ம் தேதி மனித சங்கிலி போராட்டம் நடத்தப்படு ம் என வட சென்னை குடியிருப்போர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
வட சென்னை குடியிருப்போர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், கொடுங்கையூரில் அமையும் எரிஉலை திட்டத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த கருத்தரங்கம் சென்னை கொடுங்கையூரில் நேற்று நடைபெற்றது.
இதில் நீரியல் நிபுணர் எஸ்.ஜனகராஜன் பங்கேற்று பேசியதாவது: வட சென்னையில் ;செயல்பட்டு வரும் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள், உர தொழிற்சாலைகள், அனல்மின் நிலையங்களால், இப்பகுதி மக்களுக்கு நுரையீரல் சார்ந்த பிரச்சினைகள் அதிகமாக உள்ளன. மண்ணில் பாதரசம் அதிகமாக உள்ளது. குப்பையை எரித்து மின்சாரம் தயாரிக்கும் திட்டங்கள் உலக அளவில் மூடப்பட்டு வருகின்றன. எரித்து விட்டால் எல்லா கழிவுகளும் காணாமல் போய்விடுகிறது. மின்சாரமும் கிடைக்கிறது என்பது குறுகியகால தீர்வாக மட்டுமே இருக்கும்.
இப்போது நாளொன்றுக்கு 2100 டன் குப்பையை எரிப்பதாக திட்டத்தை தொடங்குவார்கள். பின்னர் அது, 6 ஆயிரம் டன்னாக உயரும் மக்காத குப்பையை மறு சுழற்சி செய்ய ஏராளமான விழிமுறைகள் இருந்தும், குப்பை எரிப்பது சோம்பேரித்தனமான திட்டம். வட சென்னையில் மக்கள் சுற்றுச்சூழல் நீதியை பெற போராட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டமைப்பின் தலைவர் டி.கே.சண்முகம் பேசும்போது, “கொடுங்கையூரில் குப்பை எரிஉலையை செயல்படுத்தினால், வட சென்னை விஷமாக மாறிவிடும். மக்களை கொன்று செயல்படுத்தப்படும் வட சென்னைக்கான வளர்ச்சி திட்டம் தேவையில்லை” என்றார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கவுன்சிலர் ஆர்.ஜெயராமன் பேசும்போது, மேயர் ஆர்.பிரியாவை சந்தித்து, கொடுங்கையூர் எரிஉலை திட்டம் வேண்டும் என்று வலியுறுத்தியபோது, அரசின் கொள்கை முடிவு என்றார். அரசின் கொள்கை முடிவு மக்கள் நலன் சார்ந்து தானே இருக்க வேண்டும்”என்றார்.
காங்கிரஸ் கவுன்சிலர் ஜெ.டில்லிபாபு பேசும்போது, புதிய தலைமைச் செயலகத்தை, கொடுங்கையூர் குப்பை கிடங்கில் அமைக்க வேண்டும். அப்போதுதான் வடசென்னை வளர்ச்சி பெறும். எரிஉலை திட்டம் வேண்டாம் என முதல்வர் ஸடாலினை சந்தித்து வலியுறுத்துவோம்” என்றார்.
இந்திய கம்யூனிஸ்ட் கவுன்சிலர் ரேணுகா பேசும்போது, நான் மாநகராட்சி மன்ற நிலைக்குழுவில் (சுகாதாரம்) இருக்கிறேன். எரிஉலை திட்டம் எங்கள் அனுமதிக்கே வரவில்லை” என்றார்.
மதிமுக கவுன்சிலர் ஜீவன் பேசும்போது, எரிஉலை திட்டத்தின் சாதக, பாதகங்கள் குறித்து, வடசென்னை குடியிருப்போர் நலச்சங்க பிரதிநிதிகளு டன் ஆலோசனை நடத்த மாநகராட்சி ஆணையர் திட்டமிட்டுள்ளார். அதே நேரத்தில், ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்யாமல், வீட்டிலேயே உண்ண பழகி, குப்பை உருவாவதை குறைக்க வேண்டும்”என்றார்.
அதனைத் தொடர்ந்து கூட்டத்தில், “கொடுங்கையூர் குப்பை மேட்டை அகற்ற வேண்டும். கொடுங்கையூர் எரிஉலை திட்டத்தை கைவிட வேண்டும். தற்போது கொடுங்கையூர், சின்னமாத்தூரில் செயல்பட்டு வரும் எரிஉலைகளை மூட வேண்டும். இவற்றை வலியுறுத்தி மே 25ம் தேதி 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்கும் மனித சங்கிலி போராட்டம் நடத்தப்படும்” என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.