புதுடெல்லி: ஏழைகளிடமிருந்து பணத்தை கொள்ளையடித்தவர்களை பிரதமர் மோடி விட்டுவிடமாட்டார் என நிதி மோசடியில் தொடர்புடைய வைர வியாபாரி மெகுல் சோக்ஸி கைது குறித்து மத்திய இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி தெரிவித்துள்ளார்.
2021 ஆம் ஆண்டில், பிரதமர் மோடி, மத்திய விஜிலென்ஸ் கமிஷன் (சிவிசி) மற்றும் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) ஆகியவற்றின் கூட்டு மாநாட்டில் உரையாற்றினார். அப்போது ஏழைகளை ஏமாற்றுபவர்கள் உலகில் எங்கிருந்தாலும், அவர்கள் எவ்வளவு சக்தி வாய்ந்தவர்களாக இருந்தாலும், அவர்கள் தண்டிக்கப்படுவார்கள்” எனக் கூறியிருந்தார்.
இதனிடையே, பிரதமர் மோடி மக்களுக்கு அளித்த வாக்குறுதியை மேற்கோள் காட்டி, “மத்திய இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி கூறியதாவது, ஏழைகளிடமிருந்து பணத்தை கொள்ளையடித்தவர்களை பிரதமர் மோடி விட்டுவிடமாட்டார். நாட்டில் ஏராளமானோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது மெகுல் சோக்ஸி கைது செய்யப்பட்டுள்ளார். இது மிகப் பெரிய சாதனை.” என்றார்.
பஞ்சாப் நேஷனல் வங்கியின் ரூ.13,500 கோடி நிதி மோசடியில் தொடர்புடைய வைர வியாபாரி மெகுல் சோக்ஸி, பெல்ஜியத்தில் அந்த நாட்டு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தியாவின் நாடு கடத்தல் தொடர்பான கோரிக்கையை ஏற்று கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவரது ஜாமீன் மனு மீதான விசாரணை ஒரு வாரத்துக்கு பிறகு நடைபெற உள்ளது. இடைப்பட்ட காலத்தில் அவர் சிறையில் இருப்பார்.