ஐபிஎல் தொடரின் 29வது லீக் ஆட்டம் நேற்று (ஏப்ரல் 13) டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் அக்சர் படேல் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணியும் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. இப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியே முதலில் பேட்டிங் செய்தது.
20 ஓவர்களில் அந்த அணி 5 விக்கெட்கள் இழப்பிற்கு 205 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக திலக் வர்மா 59, ரிக்கில்டன் 41, சூர்யகுமார் யாதவ் 40 மற்றும் நமன் தீர் 38 ரன்களும் எடுத்தனர். இதில் டெல்லி கேபிடல்ஸ் அணி திட்டங்களை தீட்டுவதற்கும் ஃபீல்டிங் செட் செய்வதற்கும் அதிக நேரம் எடுத்துக்கொண்டது. இதன் காரணமாக டெல்லி கேபிடல்ஸ் அணியால் குறிப்பிட்ட நேரத்திற்குள் 20 ஓவர்களையும் வீசி முடிக்க முடியவில்லை.
இந்த நிலையில், ஸ்லோ ஓவர் ரேட் என்ற விதியின்படி டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் அக்சர் படேலுக்கு ரூ. 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணி செய்யும் முதல் ஸ்லோ ஓவர் ரேட் தவறு என்பதால் ரூ. 12 லட்சம் மட்டும் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. மீண்டும் டெல்லி கேபிடல்ஸ் அணி இதே தவறை செய்யும் பட்சத்தில் அந்த அணி கேப்டனுக்கு ரூ. 24 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 205 ரன்கள் அடித்த நிலையில், டெல்லி அணி 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது. இம்பேக்ட் வீரராக களம் இறங்கிய கருண் நாயர் 80 ரன்களை விளாசினார். இதனால் டெல்லி அணி வெற்றிப் பாதையை நோக்கி சென்றது. ஆனால், மும்பை இந்தியன்ஸ் சூழற்பந்து வீச்சாளர் கரன் சர்மா 3 விக்கெட்களை வீழ்த்தி விளையாட்டியின் போக்கை மாற்றினார்.
அதேபோல் 19வது ஓவரில் மூன்று பேட்டர்கள், ரன் அவுட் ஆகினர். இதனால் டெல்லி அணி 193 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் காரணமாக மும்பை இந்தியன்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இது இரண்டாவது வெற்றி ஆகும். அந்த அணி இதுவரை 6 போட்டிகளில் விளையாடி உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிங்க: இனி கேமரா நடக்கும், ஓடும்… நாயை போல் சேட்டை செய்யும் – வேற லெவலுக்கு போகும் ஐபிஎல்
மேலும் படிங்க: ருதுராஜ்க்கு பதில் சிஎஸ்கேவில் இணைந்த 17 வயது வீரர் ஆயுஷ் மத்ரே!