சென்னை: தமிழ் புத்தாண்டு புதிய எழுச்சியையும், மகிழ்ச்சியையும் வழங்கும் ஆண்டாக அமையட்டும் என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:
ஆளுநர் ஆர்.என்.ரவி: தமிழ்ப் புத்தாண்டு, பெருமைமிக்க பண்டைய, வளமான தமிழ் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் நம்பிக்கைக்குரிய எதிர்காலத்தின் கொண்டாட்டமாகும். இந்த புத்தாண்டு அனைவருக்கும் வளம், நல்ல ஆரோக்கியம், புதுப்பிக்கப்பட்ட ஆற்றல் மற்றும் ஏராளமான வாய்ப்புகளை கொண்டுவரட்டும்.
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: புதிய தமிழ் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஒவ்வொரு தமிழரின் உள்ளத்திலும் புதிய சிந்தனைகள், புதிய முயற்சிகள், புதிய நம்பிக்கைகளோடு கூடிய புதிய உத்வேகம் பிறக்கட்டும். வழிமறிக்கும் தடைகளை தகர்த்து புதிய வெற்றிகளை பெற்று வளமான தமிழகத்தை படைத்திடுவோம்.
மத்திய இணையமைச்சர் எல்.முருகன்: தமிழ் புத்தாண்டு மலரும் இந்நன்னாளில் அனைத்து மக்களுக்கும் அன்பையும், நிறைந்த ஆரோக்கியத்தையும், மிகுந்த மகிழ்ச்சியையும், வெற்றிகளையும் வாரி வழங்கும் ஆண்டாக அமைய இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன். உலகெங்கும் வாழும் தமிழ் சொந்தங்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை: தமிழர்களின் கலாச்சாரத்தை பாதுகாக்க வழி ஏற்படுத்தவும், அனைவரது வாழ்வும் ஏற்றம் பெறவும் தமிழ் புத்தாண்டு உதவட்டும். அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்: மக்களுக்கு வாழ்வில் புதிய எழுச்சியையும், மகிழ்ச்சியையும், மாநில வளர்ச்சியையும் வழங்கும் ஆண்டாக இப்புத்தாண்டு மலரட்டும். புதிதாக மலரும் இந்த ஆண்டில் செல்வத் திருமகள் பீடமான தாமரை, மலர்ச்சியை நம் தமிழகத்தில் உறுதி செய்யப்போகிறது.
பாமக நிறுவனர் ராமதாஸ்: தமிழர்கள் வாழ்வில் நீங்காத இடம் பிடித்திருக்கும் சித்திரை திருநாளை உலகெங்கும் கொண்டாடும் தமிழக மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: தமிழ் புத்தாண்டில் தமிழர்கள் அனைவரது வாழ்விலும் அன்பு மேலோங்கி அமைதி நிலவட்டும். இன்பமும், இனிமையும் இல்லந்தோறும் பொங்கட்டும் என வாழ்த்துகிறேன்.
பாமக தலைவர் அன்புமணி: இந்திர விழாவை நமக்கு கொண்டு வரும் சித்திரை திருநாளை கொண்டாடி மகிழும் தமிழக மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: இலைகளையும், மொட்டுகளையும், பூக்களையும், காய்களையும், கனிகளையும் தந்து இயற்கைத் தாய் நம்மை களிப்படையச் செய்யும் காலம் மலரும் சித்திரையை மகிழ்வோடு கொண்டாடி மகிழ்வோம்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: வசந்தகாலத்தின் தொடக்கமாகவும், உலகெங்கும் வாழும் தமிழர்கள் கொண்டாடும் சித்திரை மாதம் நமக்கு வசந்தகாலமாக அமையட்டும். அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: தமிழ் புத்தாண்டை மகிழ்ச்சியோடும், உற்சாகத்தோடும் கொண்டாடி மகிழும் தமிழக மக்கள் அனைவருக்கும் எனது இனிய நல்வாழ்த்துகள்.
ஐஜேகே தலைவர் ரவி பச்சமுத்து: தமிழ் புத்தாண்டில் தமிழரின் பாரம்பரியமும், பண்பாடும் அனைவரிடமும் மலர்ந்து நலம் தழைக்கட்டும்.
முன்னாள் எம்.பி. சரத்குமார்: இனிய சித்திரை புத்தாண்டில் மக்கள் வாழ்வில் வளம்பெருக வாழ்த்தி, உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவர்களுடன் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், முன்னாள் எம்.பி. சு.திருநாவுக்கரசர், கோகுல மக்கள் கட்சியின் நிறுவனர் எம்.வி.சேகர், தமிழக முற்போக்கு மக்கள் கட்சி தலைவர் க.சக்திவேல், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவன தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா, இந்திய கிறிஸ்தவ மதச்சார்பற்ற கட்சி தலைவர் எம்.எஸ்.மார்டின், தமிழ்நாடு ஐஎன்டியுசி மூத்த தலைவர் மு.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.