மதுரை: “தென் மாவட்டங்களுக்கான ரயில்வே திட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றவில்லை” என, மாணிக்கம் தாகூர் எம்.பி குற்றம்சாட்டினார்.
மதுரை அவனியாபுரம் பகுதியில் அம்பேத்கர் சிலைக்கு விருதுநகர் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் தலைமையில் காங்கிரஸார் மாலை அணிவித்தனர். இதைத்தொடர்ந்து திருநகரிலுள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் மாணிக்கம் தாகூர் எம்.பி செய்தியாளர்களிடம் கூறியதாவது: அகமதாபாத்தில் காங்கிரஸ் மாநாடு வெற்றிகரமாக முடிந்தது. அதில் நியாயப்பாதை என்ற தலைப்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
குறிப்பாக தனியார் கல்லூரி, பல்கலைக்கழகங்களிடமும் அரசியல் சாசனத்தில் 15/5-வது பிரிவில் பிற்படுத்தப்பட்ட, பட்டியல் , பழங்குடியின மாணவர்களுக்கு உரிய இடம் கொடுக்க வேண்டும். அரசியல் சாசன பிரிவை மோடி அரசு அமல்படுத்தவேண்டும். இந்தியாவில் 60 சதவீத பள்ளி , கல்லூரிகள் தனியார் வசம் சென்றுள்ளது. அதிலும் பட்டியலின, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான வழியானது அடைக்கப்பட்டுள்ளது.
தெலங்கானாவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தியதன் மூலம் 27 சதவீதம் இருந்த இட ஒதுக்கீடு பட்டியலின, பிற்படுத்தப்பட்ட, பழங்குடி மற்றும் சிறுபான்மையினருக்கான இட ஒதுக்கீடு 42 சதவீதமாக வந்துள்ளது. சாதிவாரி கணக்கெடுப்பு மிக முக்கியம். மத்திய அரசும் , ஆர்எஸ்எஸ்ஸும் அதை எடுக்கமாட்டார்கள். இதை எடுத்தால் பட்டியலின, பிற்படுத்த மக்களுக்கான இட ஒதுக்கீடு அதிகரிக்கும் என மோடி அரசு மறுக்கிறது.
தமிழக அரசும் சாதி வாரி கணக்கெடுப்பை தொடங்க வேண்டும். அகமதாபாத் மாநாட்டில் நிறைவேற்றிய தீர்மானங்களை தொண்டர்களிடம் எடுத்துச் செல்லும் விதமாக இந்தியா முழுவதும் காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம் நடத்தப்படும். தமிழக அமைச்சர்கள் மாற்றுத்திறனாளிகள், பெண்கள் குறித்த பேச்சுக்கு எதிர்ப்பு கிளம்பினாலும், முதல்வர் நடவடிக்கை எடுத்துவிட்டார்.
மதுரை கல்லூரி விழாவில் ஆளுநர் ரவி ஜெய்ஸ்ரீராம் என, மாணவர்களை சொல்ல வைத்தது மத அடிப்படையில் மாணவர்களை நடந்துகொள்ள வலியுறுத்துவதாகும். இது மிகவும் வெட்கப்பட வேண்டிய செயல். ஆளுநராக இருப்பவர் அரசியல் சாசனத்திற்கு அவப்பெயர் ஏற்படும் விதமாக நடந்து கொள்வது வருத்தம்.
தென் மாவட்டங்களுக்கான ரயில்வே திட்டங்களை நிறைவேற்றவில்லை . இத்துறையின் அமைச்சர் ரீல்ஸ் எடுப்பதில் கவனம் செலுத்துகிறார். தென் மாவட்டங்களில் புதிய ரயில்கள் இயக்க தொடர்ந்து கோரிக்கை விடுக்கிறோம். நாடாளுமன்றத்திலும், நேரிலும் இது தொடர்பாக வலியுறுத்துகிறோம். ஏப். 24-ம் தேதி தென் மண்டல ரயில்வே திட்டங்கள் தொடர்பாக கூட்டம் நடக்கிறது. இக்கூட்டத்தில் விருதுநகர், தென்காசி உள்ளிட்ட பகுதிகளுக்கான ரயில்வே திட்டங்களை நிறைவேற்ற தென்மாவட்ட எம்.பிக்கள் வலியுறுத்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.